Published:Updated:

`போராடிய பெண் செவிலியர்களை கேவலமாக நடத்தினார்கள்!' - இதுதான் விடியலா முதல்வரே?!

``கடந்த 28-ம் தேதி, நள்ளிரவு வரை நீடித்த செவிலியர்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் செவிலியர்களைக் கையாண்ட விதம் மிகவும் மோசமானதாக இருந்தது. இந்த சம்பவம் வெளியில் வரவே இல்லை” என்று கொந்தளிக்கின்றனர் பாதிக்கப்பட்ட செவிலியர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும்” - உலக செவிலியர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை.

ஆனால், இன்றோ, `தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று போராடிய செவிலியர்களை காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்கியிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.

``கடந்த 28-ம் தேதி, நள்ளிரவு வரை நீடித்த செவிலியர்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் செவிலியர்களைக் கையாண்ட விதம் மிகவும் மோசமானதாக இருந்தது. இந்த சம்பவம் வெளியில் வரவே இல்லை” என்று கொந்தளிக்கின்றனர் பாதிக்கப்பட்ட செவிலியர்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கொரோனா பணிக்காக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மூன்று கட்டங்களாக, தற்காலிக செவிலியர்கள் நியமனம் நடந்தது. `தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்டமாகச் சேர்க்கப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதுவே பெரிய பிரச்னையாக வளர்ந்துகொண்டிருந்தது. இந்தநிலையில், இதுவரை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த இந்தச் செவிலியர்களை மாவட்ட நிர்வாகத்தின்கீழ் மாற்றப் போவதாகத் தகவல் வெளியானது. இதன் பிறகுதான், `எங்கள் பணிக்கு பாதுகாப்பு இல்லை’ என்று 3,485 செவிலியர்களும் போராட்டத்தில் குதித்தார்கள்.

செவிலியர்களின் இந்தப் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். 28-ம் தேதி, நள்ளிரவு வரையிலும் போராட்டம் நீடித்தது. இதற்கிடையில், எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீரராகவன் மற்றும் அச்சங்கத்தின் நிர்வாகிகள் உதயகுமார், மதியரசன், அன்புச்செல்வி, கோகிலா, அமலா உள்ளிட்டோர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ``உங்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் மாற்ற மாட்டோம். உங்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்படும். வரும் 4-ம் தேதி திங்கள்கிழமை இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்’’ என்று கூறிய அமைச்சர் போராட்டத்தை கைவிடக் கோரியிருக்கிறார்.

செவிலியர்களை போலீஸார் வெளியேற்றியபோது...
செவிலியர்களை போலீஸார் வெளியேற்றியபோது...
நள்ளிரவு வரை நீடித்த செவிலியர்கள் போராட்டம்: கைது; வாக்குவாதம்; பேச்சுவார்த்தை..! - நடந்தது என்ன?

இதையடுத்து, போராட்டம் நடந்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்துக்கு (டி.எம்.எஸ்) திரும்பிய பேச்சுவார்த்தைக் குழுவினர் சக செவிலியர்களிடம் அமைச்சர் கூறியதைத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், பல செவிலியர்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் மீடியாக்களில் வந்துவிடக் கூடாது என்பதற்காக மீடியாக்களை அனுமதிக்கவில்லை என்று குமுறுகின்றனர் பாதிக்கப்பட்ட செவிலியர்கள். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோக்களை, `இதுதான் உங்களது விடியலா?’ என்ற சீற்றம் நிறைந்த கேள்வியுடன் பகிர்ந்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று என்னதான் நடந்தது? எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் (Medical Services Recruitment Board) மாநிலத் தலைவர் வீரராகவனிடம் பேசினோம்.

``அமைச்சருடன் பேச்சுவார்த்தையை முடிச்சுட்டு வந்ததும், அமைச்சர் சொன்ன விஷயங்களை சக செவிலியர்கள்கிட்ட தெரிவிச்சோம். ஆனா, பலபேர் அதை ஏத்துக்கலை. `இப்போ இப்படித்தான் சொல்லுவாங்க. அப்புறம் ஏமாத்திருவாங்க. எதுவா இருந்தாலும் எழுத்துபூர்வமா எழுதி வாங்கிகிட்டு அப்புறம் இங்கிருந்து போலாம்’னு சொன்னாங்க. அவங்க சொல்றதுலயும் நியாயம் இருந்துச்சு. ஏன்னா, இதுக்கு முன்னால அப்படித்தான் நடந்திருக்கு. சமீபத்துல கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்ல வேலை செய்யுற தற்காலிக செவிலியர்கள் சாப்பாடு மற்றும் தங்கும் இடம் கேட்டுப் போராடினாங்க. ஏற்பாடு செய்வதா வாக்குறுதி கொடுத்து போராட்டத்தைக் கலைச்சாங்க. ஆனா, அடுத்த சில நாள்ல போராட்டம் நடத்திய செவிலியர்களை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டு பிரச்னையை முடிச்சுட்டாங்க. அப்படியிருக்கும்போது, எப்படி எல்லோரும் வாய் வார்த்தையை நம்புவாங்க.

வீரராகவன்
வீரராகவன்

ஆனாலும், நாங்க அவங்ககிட்ட பேசிப் புரியவைக்க முயற்சி பண்ணோம். அதுக்குள்ள போலீஸார் எல்லைமீற ஆரம்பிச்சுட்டாங்க. `அதான் நீங்க சொல்றதை யாரும் கேக்கலைல... நீங்க வெளியில வாங்க... நாங்க பார்த்துக்குறோம்’னு எங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமா அப்புறப்படுத்திட்டு மத்தவங்களையெல்லாம் ஏதோ கிரிமினல்ஸ் மாதிரி நடத்தி அங்கிருந்து விரட்டியிருக்காங்க. சொல்றதுக்கே ரொம்ப வேதனையாவும் கவலையாவும் இருக்கு. ஆண் போலீஸ்காரங்க பலர் பெண் செவிலியர்கள் மார்பில் கைவெச்சு தள்ளியிருக்காங்க. பெண் செவிலியர்களை பெண் போலீஸார்தான் தொடணும்ங்கிற அடிப்படை விதியைக்கூட அவங்க பின்பற்றலை.

ஆண் செவிலியர்களை கேவலமாக கொச்சையான வார்த்தைகள்ல திட்டியிருக்காங்க. ஏதோ கொள்ளைக்கூட்டத்தை வளைக்கிறதுபோல கயிறு எடுத்துட்டுவந்து எல்லோரையும் கயிற்றில் வளைச்சு வெளியில் இழுத்திருக்காங்க. அதுல ஒரு பெண்ணுக்கு கழுத்து இறுகிருச்சு. இன்னும் வலி இருக்குன்னு அந்தப் பொண்ணு போன் பண்ணுது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் அசம்பாவிதம் ஆகியிருக்கும். அதேபோல ஓர் ஆண் செவிலியரை வலுக்கட்டாயமா தூக்கிட்டுப் போய் இடுப்பிலிருக்கும் அரணாக்கொடி முதல் கால்ல போட்டிருந்த செருப்பு வரை எல்லாத்தையும் கழட்டி, தரையில உட்கார வெச்சு அக்யூஸ்டு மாதிரி நடத்தி அனுப்பியிருக்காங்க.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
`தாயைவிட எங்களுக்குத்தான் அதிகமாக வலிக்கும்!' - செவிலியர் தினத்தில் ஒரு வேதனைப் பகிர்வு

நாங்களும் யூனிஃபார்ம் சர்வீஸ்தானே பண்றோம். அப்படி நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்..? எங்க உயிரை பொருட்படுத்தாம செஞ்ச வேலைக்கு இதுதான் இந்த அரசு கொடுக்கிற மரியாதையா? நாங்க நேர்மையா வொர்க் பண்ணலைன்னா மக்கள் உயிரோட இருக்க முடியுமா? தி.மு.க ஆட்சிக்கு வந்தா நமக்கு ஒரு விடிவுகாலம் வந்திரும்ங்கிற எண்ணம் இருந்துச்சு. ஆனா, போலீஸை வெச்சு இந்த மாதிரி இவங்க பண்ணதை எங்களால ஏத்துக்கவே முடியலை. அடுத்தகட்ட போராட்டத்துல நாங்க இறங்க வேண்டிய சூழல் வந்தா இதேபோல ஒரு இடத்துலகூடி நின்னு கோரிக்கை வைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. எங்களுக்கு நிச்சயம் மக்கள் சப்போர்ட் பண்ணுவாங்க. எத்தனையோ பேரோட உயிரைக் காப்பாத்தியிருக்கோம் எங்களுக்கு ஒண்ணுன்னா எங்களை ஆதரிக்க மாட்டாங்களா என்ன? அதுவும் இல்லைன்னா எங்களோட ஒட்டுமொத்த செவிலியர் சேவையையும் நாங்கள் நிறுத்துறோம்னு அறிவிச்சுருவோம். செவிலியர்கள் இல்லைன்னா ஹாஸ்பிட்டல்ல எந்த வேலையும் நடக்காது. மத்த சங்கங்களோட பேச்சுவார்த்தை நடத்திகிட்டிருக்கேன். கான்ட்ராக்ட்ல இருக்குற அத்தனை செவிலியர்களையும் நிரந்தரமாக்கணும். செவிலியர்களின் ஒட்டுமொத்த தலைவிதியை மாத்தி எழுதணும்” என்கிறார் சீற்றத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு