Published:Updated:

`இனி சென்னை மாநகரப் பேருந்துகளையும் ட்ராக் செய்யலாம்!' - வருகிறது புதிய ஆப்

சென்னை மாநகரப் பேருந்துகளையும் ட்ராக் செய்யலாம்
சென்னை மாநகரப் பேருந்துகளையும் ட்ராக் செய்யலாம்

எந்தெந்த வழித்தட எண்கள் கொண்ட பேருந்துகள் எந்த இடத்துக்குச் செல்லும் என்பதையும் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் பேருந்துகளைப் பயன்படுத்துவதை குறைத்து, ரயில், ஆட்டோ, டாக்ஸி பயணங்களை மக்கள் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு பேருந்து சரியான நேரத்திற்குக் கிடைப்பதில்லை, பேருந்தின் வழித்தட எண்ணைக் கண்டுபிடித்து பயணம் செய்வது சிக்கலாக உள்ளது எனக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், தற்போது சென்னையில் பேருந்து பயணங்களை எளிமையாக்க 'CHALO' என்னும் ஆப் வந்திருக்கிறது.

இந்த ஆப் மூலம் சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான அரசுப் பேருந்துகளை இனி டிராக் செய்ய முடியும். இதற்கு முன் கல்கத்தா, விஜயவாடா போன்ற பெரு நகரங்களில் பயன்படுத்தப்பட்ட இந்தச் செயலி தற்போது சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படிப் பயன்படுத்துவது?

கூகுள் ப்ளே ஸ்டோரில்' CHALO' என்று தேடி இந்த லைவ் பஸ் டிராக்கிங் ஆப்பினை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த ஆப்பிற்கு லோகேஷன் ஷேரிங் அவசியம் என்பதால் அதற்கு அனுமதி கொடுத்துக் கொள்ளவும். இதில் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எந்த மொழி பயன்படுத்த வசதியாக இருக்குமோ அந்த மொழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் பயணம் செய்ய வேண்டிய இடத்தை தேர்வு செய்தால் போதும். அருகில் உள்ள ஐந்து பேருந்து நிறுத்தங்கள் எவை? நீங்கள் பயணிக்க வேண்டிய வழித்தடத்துக்கு அடுத்து வரவுள்ள ஐந்து பேருந்துகள் எவை உள்ளிட்ட தகவலை இந்த ஆப்பின் மூலம் பெற முடியும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் பேருந்து எந்த ஊர்களின் வழியாகச் செல்லும், எந்தெந்த பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.

இருமல் சத்தத்தை வைத்தே காசநோயைக் கண்டறியும் புதிய ஆப்!
CHALO APP
CHALO APP

Search என்ற இடத்தில் நீங்கள் பயணம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டால் எந்தெந்த வழித்தட எண்கள் கொண்ட பேருந்துகள் நாம் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்குச் செல்லும் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இது 'காவலன் SOS' ஆப்புடனும் இணைக்கப்பட்டுள்ளதால் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

சென்னையில் இயங்கிவரும் சுமார் 3,300 பேருந்துகளில் 90 சதவிகிதம் பேருந்துகளில் ஏற்கெனவே ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும் அரசின் Locate My Bus App (LAMB) ஆப்பிற்கான சோதனை ஓட்டம்தான் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பேருந்து
சென்னைப் பேருந்து

``இந்தச் செயலி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தனியார் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தும் மக்களும் மீண்டும் பேருந்தினைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்" என்கின்றனர் அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு