Published:Updated:

‘தனி அறையில் அடைத்துக் கொடுமை; உணவு கொடுப்பதில்லை!’ -வேலூர் நீதிமன்றத்தில் ஆதங்கப்பட்ட முருகன்

‘‘வேலூர் சிறையில் என்னைத் தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார்கள். சாப்பிட உணவு கொடுப்பதில்லை. நான் செல்போனையும் பயன்படுத்தவில்லை. சிறை அதிகாரிகளைப் பின்னணியில் யாரோ இயக்குகிறார்கள்’’ என்று நீதிமன்றத்தில் முருகன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட முருகன்
வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட முருகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி, பெண்கள் சிறையிலும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவருகிறார்கள். கடந்த 18-ம் தேதி முருகன் அறையிலிருந்து ஆண்ட்ராய்டு செல்போனைப் பறிமுதல் செய்ததாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

முருகன்
முருகன்

இந்த வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் முருகன் இன்று அழைத்துவரப்பட்டார். அப்போது செய்தியாளர்களைப் பார்த்த முருகன், ‘சிறையில் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டார். மேலும் அவர், ‘‘சிறையில் என்னைத் தனிமைப்படுத்தி அடைத்துள்ளனர். உணவு தர மறுக்கிறார்கள். புரட்டாசி மாதம் தொடங்கி 45 நாள்களுக்கு நான் விரதம் இருப்பேன். 

அப்போது, விதிகளுக்கு உட்பட்டு பழங்களை வாங்கிச் சாப்பிடுவேன். இப்போது, பழங்களையும் கொடுப்பதில்லை. என் பரோலைத் தடுப்பதற்காகத்தான் சிறை அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள். சிறைக்குள் செல்போன் பயன்படுத்த முடியுமா, இந்தக் கேள்வியில் லாஜிக் இருக்கிறதா? சிறை அதிகாரிகள் நினைத்தால் யார்மீது வேண்டுமானாலும் பழிபோடுவார்கள். சிறை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நான் செல்போன் பயன்படுத்தவில்லை. 

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

சிறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் மூச்சுகூட விட முடியாது. குளிக்கவும் துணி துவைக்கவும் அனுமதிப்பதில்லை. இன்றுடன் 14-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறேன். அதையும் மறைக்கிறார்கள். முதல்வருக்கு நான் எழுதிய நான்கு பக்க கடிதத்தை அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள். கடிதம் எழுத பேப்பர் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். எனக்கு மருத்துவப் பரிசோதனை செய்தாலே உடல் பலவீனம் தெரியும்.

விடுதலையையும் தடுக்கிறார்கள். ஆன்மிகவாதியாக வாழ்வதையும் தடுக்கிறார்கள். அப்புறம் நாங்கள் என்னதான் செய்ய வேண்டும். ரவுண்டு கட்டி என்னை ‘அட்டாக்’ பண்ணத் திட்டமிட்டுள்ளனர். இலங்கையில் என் தந்தையின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. என் மனைவி நளினியும் நானும் பரோலில் செல்ல மனு அளித்தோம். வெளியில் எங்களை அனுப்பக்கூடாது என்பதே சிறைத்துறை அதிகாரிகளின் எண்ணமாக இருக்கிறது.

வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன்
வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன்

தமிழக அரசு எங்களுக்கு எதிர்ப்பில்லை. சிறை அதிகாரிகளைப் பின்னணியில் யாரோ இயக்குகிறார்கள்’’ என்றார். முன்னதாக, நீதிபதி நிஷா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் முருகன். நீதிபதியிடம் முருகன் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். பின்னர், அடுத்த மாதம் 13-ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் வேலூர் சிறைக்கு முருகன் அழைத்துச்செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.