Published:Updated:

முருகன் இட்லி கடை சாப்பாட்டில் நெளிந்த புழு! - சென்னை வழக்கறிஞரின் நேரடி அனுபவம்

எஸ்.மகேஷ்

`பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சாதத்தில் புழு நெளிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்' என்கிறார் வழக்கறிஞர் பிரபாகரன்.

முருகன் இட்லி கடை
முருகன் இட்லி கடை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர், பிரபாகரன். இவர், தனது ஜூனியர்கள் இருவருடன் பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடைக்குச் சென்று, 3 சாப்பாடுகளை ஆர்டர் செய்துள்ளார். அதற்கு 299 ரூபாய் பணமும் செலுத்தியுள்ளார். பிரபாகரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சாதத்தில் புழு நெளிந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன், மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.

புழு கிடந்த உணவு
புழு கிடந்த உணவு

இதையடுத்து, புழு கிடந்த சாப்பாட்டை செல்போனில் படம் எடுத்த பிரபாகரன், உணவு பாதுகாப்புத் துறைக்கு ஆன்லைனில் ஆதாரத்துடன் புகாரளித்தார். அதன்பேரில், முருகன் இட்லி கடையின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்துசெய்துள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

என்ன நடந்தது என்று வழக்கறிஞர் பிரபாகரனிடம் கேட்டோம். `` நான் சாப்பிட்ட சாதத்தில் புழு இருந்தது. அதுகுறித்து கிளையின் மேலாளரிடம் கூறியபோது அவர், இதைக் கண்டுகொள்ளாதீர்கள், பிரச்னை செய்யாதீர்கள் என்று கூறினார். இதனால்தான் புழு கிடந்த சாதத்தை செல்போனில் படம்பிடித்து உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி, புகார் கொடுத்தேன். உடனடியாக உணவு பாதுகாப்புத் துறையினர் முருகன் இட்லி கடைக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அதன்பிறகு, சென்னையில் செயல்படும் முருகன் இட்லி கடை கிளைகளுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கிச்சனிலிருந்துதான் சாப்பாடு, பொரியல், குழம்பு ஆகியவை தயாரித்து சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது.

prabakaran
prabakaran

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். என்னைப் போல ஏற்கெனவே பலர், முருகன் இட்லி கடைமீது புகார் கொடுத்துள்ளனர். இதனால், வாடிக்கையாளர்களின் புகார்களைச் சரிசெய்யும்படி ஏற்கெனவே உணவு பாதுகாப்புத்துறை, முருகன் இட்லி கடைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், கடை நிர்வாகம், அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து, முருகன் இட்லி கடையின் கிச்சனிலிருந்து உணவுகளைத் தயாரித்து சப்ளை செய்வதற்கான லைசென்ஸை தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட முருகன் இட்லி கடை நிர்வாகத்திலிருந்து என்னிடம் பேசினார்கள். அப்போது நான், சட்டப்படி இந்தப் பிரச்னையைப் பார்த்துக்கொள்வோம் என்று கூறிவிட்டேன்.

ஹோட்டல்களில், லைசென்ஸ் விவரங்களை அனைவரும் பார்க்கும்படி வைத்திருக்க வேண்டும். ஆனால், முருகன் இட்லி கடை பாரிமுனை கிளையில் லைசென்ஸ் விவரத்தை வைக்கவில்லை. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அன்றைய தினம் என்னிடம் காண்பிக்கவில்லை. நம்பிக்கையுடன் சாப்பிடச் செல்லும் இடத்தில் இப்படி நடந்ததால் புகார் கொடுத்தேன். உணவு பாதுகாப்புத் துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

murugan idli shop bill
murugan idli shop bill

வழக்கறிஞரின் புகார் குறித்து பாரிமுனை முருகன் இட்லி கடையின் மேலாளர் பாலிடம் பேசினோம். ``முறையான அனுமதி பெற்றுதான் கடையை நடத்தி வருகிறோம். அன்றைய தினம் சாப்பிட வந்த வழக்கறிஞர்கள் இலையில் புழு எப்படி வந்தது என்று தெரியவில்லை. கடையில் ஆய்வு நடத்த வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் அனைத்து ஆவணங்களையும் காண்பித்தோம்" என்றார்.

`ஆவணங்களைக் காண்பித்த பிறகும் எதற்காக லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்தார்கள்?' என்று மேலாளிடம் கேட்டதற்கு, ``அதுதான் தெரியவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எங்களின் கடை இன்னமும் பிரபலமாகியுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கிளைகளும் வழக்கம்போல செயல்படுகின்றன" என்றார்.

உரிமம் ரத்து அறிவிப்பு
உரிமம் ரத்து அறிவிப்பு

`அம்பத்தூர் தொழிற்பேட்டை கிச்சனிலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறதா?' என்ற கேள்வியை அவரிடம் கேட்டதற்கு, ``ஒவ்வொரு கிளையிலும் டிபன் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு தயாரிக்கப்படவில்லை" என்றார்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ``முருகன் இட்லி கடை மீது கொடுத்த புகாரின்பேரில் ஆய்வு நடத்தி 10-ம் தேதி நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.