Published:Updated:

`காவி உடையைப் பறித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்!’-முதல்வருக்கு, முருகன் அனுப்பிய 4 பக்கக் கடிதம்

``என்னைத் தனி அறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். நான் அணிந்திருந்த காவி உடையைப் பறித்து, தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’’ என்று முதல்வருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார், முருகன்.

முருகன்
முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவருகிறார்கள். கடந்த 18-ம் தேதி முருகன் அறையிலிருந்து ஆண்ட்ராய்டு செல்போனைப் பறிமுதல் செய்ததாகச் சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

மேலும், மனைவி நளினியை 15 நாள்களுக்கு ஒருமுறை சந்திப்பது உள்ளிட்ட அனைத்துச் சிறப்புச் சலுகைகளையும் மூன்று மாத காலத்துக்கு ரத்துசெய்து, முருகனைத் தனி அறையில் அடைத்தது சிறை நிர்வாகம். இதைக் கண்டித்து, முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கணவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

``சிறைத்துறை அதிகாரிகள் முருகனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். சிறை அதிகாரிகளின் பின்னணி எனக்குத் தெரியவில்லை. நளினி, முருகன் விடுதலையைப் பிடிக்காத எவரோதான் அதிகாரிகளை இயக்குவதாக நினைக்கிறேன். தனி அறையில் முருகனை அடைத்த பிறகு பல் துலக்கவோ, குளிக்கவோ மூன்று நாள்கள் வரை அனுமதிக்கவில்லை. குளிக்க அனுமதித்த பிறகு சோப்பு கொடுக்கவில்லை. 

நளினி
நளினி

முருகன் கடவுள் நம்பிக்கை உடையவர். காவி உடையில்தான் இருப்பார். சிறை அதிகாரிகள் காவி உடையைப் பறித்து வெள்ளை பேன்ட், சட்டையை அணியக் கொடுத்துள்ளனர். அறையில் வைத்திருந்த சாமி படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். மன உளைச்சலுக்கு ஆளான முருகன் கடந்த 20-ம் தேதியிலிருந்து, 10 நாள்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். சாப்பாடு எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடிக்கிறார்.

சிறை அதிகாரிகள் தன்னை எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது குறித்து நான்கு பக்கக் கடிதத்தில் விரிவாக எழுதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சிறைத்துறை மூலமே அனுப்பியிருக்கிறார். நளினி, முருகன் ஆகியோரை நேற்றுதான் சிறையில் சந்தித்துப் பேசினேன். முருகனின் உடல்நிலை சரியில்லை. `சிறை அதிகாரிகள் தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’ என்று என்னிடம் இருவரும் கூறினார்கள்.

முருகன்
முருகன்

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு நான் வற்புறுத்தினேன். அவர்கள் கேட்கவில்லை. நாளை (30-ம் தேதி) வேலூர் சிறைக்கு மீண்டும் சென்று நளினி, முருகனைச் சந்திக்கிறேன்’’ என்றார்.

இந்தப் புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். `` சிறைத்துறை விதிகளின்படியே அனைத்தும் நடக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டனர்.