கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணகி - முருகேசன் தம்பதியின் ஆணவப் படுகொலை இந்தியாவையே உலுக்கிய குற்றங்களில் ஒன்று. இந்த ஆணவப் படுகொலை தொடர்பான மேல் முறையீட்டையடுத்து, நேற்று முன்தினம் கண்ணகியின் அண்ணனும், வழக்கின் இரண்டாவது குற்றவாளியுமான மருது பாண்டியன் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, தன் வழக்கறிஞர் மூலமாகக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்தான், வழக்கின் இரண்டாவது குற்றவாளியான மருது பாண்டியனின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சாமிக்கண்ணுவின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சுரேஷிடம் பேசினோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``இந்த ஆணவப் படுகொலையில் இறந்த முருகேசன், கடலூர் மாவட்டம், விருதாசலம் பகுதியில் இருக்கும் குப்பநத்தம் புதுக்காலனி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி கண்ணகி புதுக்கூர்பேட்டை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். கண்ணகியுடையது அரசியல் பலமும் பணபலமும் உள்ள ஆதிக்க சாதிக் குடும்பம். முருகேசனுடையது மிகவும் ஏழ்மையான, படிப்பறிவு கிடைக்கப் பெறாத குடும்பம். விவசாயக் கூலிகளாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முருகேசன் நான்கு மாதக் கைக்குழந்தையாக இருந்தபோதே அவருடைய அம்மா இறந்துவிட, மனைவியின் தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டிருக்கிறார், முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு.

கல்வியறிவில்லாத சாமிக்கண்ணு, முருகேசன் உட்பட தன்னுடைய அத்தனை பிள்ளைகளையும் கஷ்டப்பட்டும் கல்விக்கடன் வாங்கியும்தான் படிக்க வைத்திருக்கிறார். மகன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதால் அந்தக் கடனையும் சாமிக்கண்ணுதான் கட்டியிருக்கிறார். என்னுடைய 40 வருட வழக்கறிஞர் அனுபவத்தில் சொல்கிறேன், சாமிக்கண்ணு வெள்ளந்தியான பண்பட்ட மனிதர். `என் புள்ளைங்களும் படிக்கணும்; எல்லாரோட புள்ளைங்களும் படிக்கணும்' என்பார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கண்ணகியும் முருகேசனும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதலிக்க ஆரம்பிக்கின்றனர். சாதி காரணமாகத் தங்களுடைய காதல் திருமணத்தில் முடியாது என்பதையறிந்த முருகேசனும் கண்ணகியும் மே, 2003-ல் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்துகொள்கிறனர். தம்பதியான பிறகும் அவரவர் வீடுகளிலேயே இருந்தனர்.

இரண்டு மாதங்கள் கழித்து, கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற முருகேசனுக்கு பெங்களூருவில் வேலை கிடைக்கிறது. அதுவரை பிரிந்திருந்த முருகேசன் - கண்ணகி தம்பதி பெங்களூருவுக்கு சென்று ஒன்றாக வாழலாம் என்று முடிவெடுத்துச் செல்கிறார்கள்.
கண்ணகியின் சகோதரன் மருது பாண்டியன் அரிவாளுடன் முருகேசனுடன் வீட்டுக்குச் சென்று 'உங்கப் பையன் என்கிட்ட கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்காம ஓடிட்டான்' என்று மிரட்டியிருக்கிறார். அதை நம்பி மகனைத் தேடிக் கண்டுபிடித்து ஊருக்கு வரவழைக்கிறார் முருகேசனின் அப்பா. முருகேசன் ஊருக்கு வந்தவுடன், அவரை மூர்க்கமாக அடித்து, 'எங்கே என் தங்கை' என்று மருதுபாண்டி மூர்க்கமாக விசாரிக்கிறார். தடுக்க வந்த முருகேசனின் சித்தப்பாவை கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவரொரு பஞ்சாயத்துத் தலைவர். தவிர, மருது பாண்டியனும் முருகேசனும் நன்கு பழகியவர்கள்தான். முருகேசனை 150 அடி ஆழ்துளைக்கிணற்றில் உள்ளே விட்டு விட்டு எடுத்து மிரட்ட, வேறு வழியில்லாமல் கண்ணகி இருக்கிற இடத்தை சொல்லி விடுகிறார். அங்கிருந்து இழுத்து வரப்பட்டிருக்கிறார் கன்ணகி. அன்றைய தினம் இரவு முழுக்க முருகேசனையும் கண்ணகியையும் மூர்க்கமாகத் தாக்குகிறார்கள். பிறகு கண்ணகியின் வாயிலும், காதுகளிலும் பலவந்தமாக விஷத்தை ஊற்றுகிறார்கள். வாயைத் திறக்க மறுத்த முருகேசனின் வாயை அரிவாளால் கிழித்து விஷத்தை ஊற்றுகிறார்கள். துடிதுடித்து இறந்துபோன தம்பதியை தனித்தனியாக எரித்தும் விடுகிறார்கள். இத்தனையும் ஊர் மக்கள் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 2021 செப்டம்பர் 24-ம் தேதி வந்தது தீர்ப்பு. கடலூர் சிறப்பு நீதிமன்றம், 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ஒருவருக்குத் தூக்குத்தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் முன்னிலையில் அது விசாரிக்கப் பட்டது. கொலைசெய்யப்பட்ட கண்ணகியின் அண்ணனும், வழக்கின் இரண்டாவது குற்றவாளியுமான மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது'' என்றவர், முருகேசன் தந்தை சாமிக்கண்ணு, தன் மகனை ஆணவப் படுகொலை செய்த மருது பாண்டியனின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரியதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
``நான் மனித உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர். தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரான கொள்கை உடையவன். இருந்தாலும் என் விருப்பத்தை முருகேசனின் தந்தை மீது திணிக்க முடியாதல்லவா? இருந்தாலும் என்னுடைய அந்த விருப்பம் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவின் மூலமே நடந்தது.

`அய்யா... சாதிவெறியால என் பையனும் மருமகளும் இறந்துட்டாங்க. அவங்களைக் கொன்னவங்களுக்கு மரண தண்டனை கொடுத்தா அவங்க உயிரோட வரப்போறதில்லை. அவங்களைக் கொன்னவங்களுக்கு தண்டனை கொடுத்திருக்காங்க. அதுவே போதும்ங்க. மரண தண்டனையெல்லாம் வேண்டாங்க. அவங்க குடும்பத்தோட, குழந்தைகளோட கண்ணீருக்கு நாங்க காரணமாக இருக்கக் கூடாதுங்க. இந்தத் தண்டனை ஆணவப் படுகொலை செய்ய நினைக்கிறவங்களுக்கு ஓர் எச்சரிக்கையா இருக்கட்டும்' என்றார். எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்... அவர் சொன்னதை உறுதிப்படுத்துறதுக்காக மறுபடியும் கேட்டேன். `நான் சொன்னதா கோர்ட்ல சொல்லிடுங்க அய்யா' என்றார். அந்த நேரம் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது'' என்று முடித்தார் வழக்கறிஞர் சுரேஷ்!
மேன்மக்கள்!