Published:Updated:

`ஊருக்குத்தான் அவர் தாத்தா.. எங்களுக்கு ஹீரோ!' -93 வயது தியாகியின் மரணத்தால் கலங்கிய மாணவர்கள்

அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்
அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்

மாணவர்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பதிலும் எங்கே அநீதி நடந்தாலும் அதை உடனே தட்டிக் கேட்பதிலும் கடைசிக்காலம் வரை அவர் ஒரு இந்தியன் தாத்தாவாகவே வாழ்ந்தார்.

முத்துப்பேட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களால் `இந்தியன் தாத்தா' என அழைக்கப்பட்ட 93 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் இறந்துவிடவே, அவரது உடலுக்குப் பள்ளி மாணவர்கள் அனைவரும் திரண்டு வந்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்ட சம்பவம் நெகிழவைத்துள்ளது.

தியாகராஜன்
தியாகராஜன்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள நொச்சியூர் ஊராட்சிக்கு உட்பட்டது பாலவாய் என்ற கிராமம். இங்கு 93 வயதான தியாகராஜன் என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்துவிட்டார். அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் திரண்டு வந்து கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்த பெரியவரின் உடலைப் பார்த்து, `எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே தாத்தா... இனி ஸ்கூலுக்கு வரவே மாட்டீங்களா... நீங்க இல்லாமல் இனி நாங்க என்ன செய்யப் போறோம்?' எனக் கதறி அழுதனர்.

இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். `` பட்டாமணியார் தாத்தா என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் தியாகராஜன். சுதந்திரப் போராட்ட வீரரான இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் சில காலம் பணியாற்றியுள்ளார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பதிலும் எங்கே அநீதி நடந்தாலும் அதை உடனே தட்டிக் கேட்பதிலும் கடைசிக்காலம் வரை அவர் ஒரு இந்தியன் தாத்தாவாகவே வாழ்ந்தார்.

பள்ளி விழாவில் தியாகராஜன்
பள்ளி விழாவில் தியாகராஜன்

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் அரசு பள்ளிக் கூடம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால், அதற்கான பொது இடம் இல்லை. இதைக் கேள்விபட்ட தாத்தா உடனே மெயின் ரோட்டில் இருந்த அவருக்குச் சொந்தமான இடத்தைப் பள்ளி கட்டுவதற்குத் தானமாகத் தந்தார். அந்த இடத்தில் பள்ளி கட்டப்பட்டு அதில் படித்த பலபேர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். தொடக்கப் பள்ளியாக இருந்த அதனைப் பல முயற்சிகளுக்குப் பிறகு நடுநிலைப் பள்ளியாக மாற்றுவதற்கும் அவர் பாடுபட்டார்.

வெறுமன இடத்தை மட்டும் கொடுக்காமல் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் என்ன குறை இருக்கிறது எனக் கேட்டு அதை நிறைவேற்றித் தருவார். இதனால் பள்ளியில் மட்டுமல்ல அந்த ஊரே இவர் மீது பெரும் பாசம் வைத்திருந்தது. பள்ளிக்குள் இவர் நுழைந்தாலே, மாணவர்கள் அனைவரும் `இந்தியன் தாத்தா' என அன்பாக அழைத்து அவரை சூழ்ந்து கொள்வார்கள்.

அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்
அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்

இவருக்கு மரியாதை செய்யும்விதமாக ஒவ்வொரு குடியரசு தின விழாவுக்கும் அவரை அழைத்து தேசியக் கொடியை ஏற்ற வைத்து மரியாதை தருவார்கள். தேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஜெய்ஹிந்த் என அவர் சல்யூட் அடிப்பதே அவ்வளவு கம்பீரமாக இருக்கும். தாத்தாவாக இருந்தாலும் எல்லோருக்கும் ஹீரோவாகத்தான் தெரிவார். இதற்கிடையில், அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதற்குக்கூட அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் அவரின் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்து வந்தனர்.

உடல்நிலை முடியாத அந்தத் துயர நேரத்திலும், `இந்த வருஷம் குடியரசு தின விழாவுக்குப் போக முடியல. அடுத்த வருஷம் வரை இருப்பேனோ என்னவோ. என் உசுரு அடங்குவதற்குள் உயர்நிலைப் பள்ளியாக மாற்றிவிட வேண்டும் என நினைத்தேன். அது முடியாது போல' எனக் கண்கலங்கியதுடன் அருகில் இருந்தவர்களிடம், `இந்தப் பள்ளியையும் மாணவர்களையும் எதற்காகவும் விட்டுத் தராதீர்கள்' என உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

தியாகராஜன்
தியாகராஜன்

இந்தநிலையில், அவர் திடீரென இறந்துவிட்டார். இதை மாணவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரின் இறப்பைக் கேள்விப்பட்டு வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். பலரும் அவரின் உடலைப் பார்த்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர், `பட்டாமணியார் தாத்தாவுக்குப் பள்ளிக்கூடத்தில் வர்ற சுதந்திர தினத்துக்குள் சிலை திறந்திடணும்டா' எனக் கலங்கியவாறே பேசிக் கொண்டிருந்தனர். பள்ளிக்காகவும் மாணவர்களுக்காகவும் கடைசிவரை உழைத்த ஒரு பெரியவருக்குச் செய்கிற உண்மையான மரியாதையாக இதைப் பார்க்கிறோம்" என்கின்றனர் நெகிழ்ச்சிக் குரலில்.

அடுத்த கட்டுரைக்கு