Published:Updated:

கோவையில் தேசத் துரோக வழக்கு..! - பிப்ரவரி 22-ல் சீமான் பேசியது என்ன?

சீமான்
சீமான்

கோவையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. நாட்டின் பல இடங்களில் ஷாகின்பாக் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கோவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வந்தன. ஆத்துப்பாலம் பகுதியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கோவை ஷாகின்பாக்
கோவை ஷாகின்பாக்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஷாகின் பாக் போராட்டக் களத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர். பிப்ரவரி 22-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய சீமான், “இந்தியன் ஏர்லைன்ஸ் ஏலத்துக்கு வந்தது பற்றியோ, எல்.ஐ.சி விற்பனைக்கு வந்தது தொடர்பாகவோ யாரும் பேசவில்லை. இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பதற்றத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோமே, இது அவர்களுக்கு அவசியம். இதைவைத்தே ஒரு வருஷம் ஓட்டிவிடுவார்கள். யாராவது குடியுரிமைச் சான்றிதழ் கேட்டால், ‘நான் இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பவில்லை. என்கிட்ட இருக்கு ஆனா தரமாட்டேன்’ என்று எல்லோரும் சொல்லிவிட வேண்டும்.

சீமான்
சீமான்

என்னிடம் குடியுரிமை இல்லை என்பதால் முகாமுக்கு அனுப்பும் நீ... ஒருநாள் மக்கள் புரட்சி ஏற்பட்டு முகாமுக்கோ திகாருக்கோ செல்ல வேண்டும். மக்களிடம் இருக்கும் அச்சம்தான் அவர்களுக்கு பலம். ஆறாண்டுக் காலத்தில் மதம் என்ற வார்த்தையைத் தவிர தேசத்தின் குடிகளின் காதில் வேறு எதும் விழவில்லை. வளர்ச்சி என்பதை வெறும் வார்த்தையாக வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தது நான் இந்தியனா என்பதைப் பார்த்துச் சொல்ல அல்ல. நாட்டின் குடிகளை நல்லபடியாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜெயிக்க வைத்தோம். என்னுடைய ஆதாரை நான் காட்டுகிறேன். மோடி, அமித் ஷா அவர்களது ஆதாரைக் காட்டட்டும். சி.ஏ.ஏ இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது” என்று பேசினார்.

சீமான்
சீமான்

அந்தக் கூட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் புகாரளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது 124 (ஏ) தேச துரோக வழக்கு, 153 (ஏ) விரோத உணர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு