Published:Updated:

சிவகங்கை:`முன்பு பல நாடுகளில் கச்சேரி; இப்போது..?!’ - மாத்தி யோசித்த நாதஸ்வர கலைஞர்

நாதஸ்வர தொழில்
நாதஸ்வர தொழில்

மனசு இருந்தா போதும் எந்த தொழிலும் செய்யலா, தப்பே இல்ல. எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம்.

கொரோனா காலகட்டத்தில் பலரும் தங்களது அன்றாட செலவுக்கே பணமில்லாமல் அல்லல்பட்டனர். உணவுக்கு கூட வழியில்லாத அளவிற்கு வறுமை வாட்டியது. முழுமையான ஊரடங்கு நிறைவடையாமல் இருப்பதால் பலரும் தங்கள் இயல்பான பணிகளை செய்ய முடியவில்லை. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாதஸ்வர கலைஞர் ஒருவர், சப்பாத்தி வியாபாரம் முதல் எலெக்ட்ரிசன் மற்றும் பிளம்பர்வேலையென மாற்றுத் தொழில்களையும் செய்து நம்பிக்கையை விதைத்து, அசத்தி வருகிறார்.

சப்பாத்தி வியாபார தொழில்
சப்பாத்தி வியாபார தொழில்

இது குறித்து நாதஸ்வர கலைஞர் பிரபு சங்கர், ``நான்கு தலைமுறையாக நாதஸ்வர கலையில் ஈடுபட்டுவருகிறோம். கோயிலில் பூஜை செய்வது தான் எங்கள் பூர்வீக தொழில். என் தாத்தாவின் அப்பாவிற்கு நாதஸ்வரத்தின் மீது ஏற்பட்ட பிரியத்தால் இக்கலையை கற்றுக் கொண்டுள்ளார். அவர் வழியே எங்கள் குடும்பத்தில் தாத்தா, அப்பா என தொடர்ந்து தற்போது நானும் இந்த கலையில் ஈடுபட்டு வருகிறேன். கோயில் ஒன்றில் தினமும் நாதஸ்வரம் வாசிக்கும் நான் திருமணம், கும்பாபிஷேகம், சாமி வீதி உலா, வரவேற்பு நிகழ்ச்சிகள் என சுபகாரியங்களுக்கு நாதஸ்வரம் வாசிக்கிறேன்.

ஆனால் கொரோனா துவங்கியவுடன் முழுமையாக பணிகள் நின்றுவிட்டது. 20 நாள் வரை என்னடா செய்வதுனு யோசிச்சேன். கொரோனா காலத்தில் பலரும் உணவின்றி தவித்தது தெரியவர சாப்பாடு தயாரித்து விற்பனை செய்யலாம் என, சப்பாத்தி மற்றும் குருமா தாயாரித்து விற்பனை செய்தேன். ஒரு சப்பாத்தி 10 ரூபானு வித்தேன். தினமும் 500 ரூபா வரை வருமானம் கிடைச்சது. அதே சமயம் கேலிப் பேச்சும், கிண்டலும் இலவசமாக கிடைச்சது. பல இடங்களுக்கு வேலை கேட்டு சென்ற போது வேலை கிடைக்கல. வேற வழியில்லாம தான் சப்பாத்தி வித்தேன்.

சப்பாத்தி விற்பனை தொழில்
சப்பாத்தி விற்பனை தொழில்

அப்போயெல்லாம் உதவாத சிலர் என்ன விமர்சிக்க மட்டும் ஓடி வந்தாங்க. ஆனா நா எதையும் கண்டுக்கிடல. துஷ்டன கண்டா தூர விலகு என்ற கதையா நானும் அதுக்கு இடம் கொடுக்காம நகர்ந்துட்டேன். நான் ஆஸ்திரேலிய, மலேசியா, சிங்கப்பூர்னு பல நாடுகளில் கச்சேரி செய்து நல்ல பெயர் வச்சுருக்கேன். அதற்காக நான் வேறு வேலை பார்க்க மாட்டேனு சொகுசா இருந்துட்டா என் குடும்பத்த யார் கவனிக்கிறது. கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதால் எனக்கு நிறைய செலவு இருக்கு. அதனால எந்த தொழில் செய்தால் என்ன என்று சப்பாத்தி வியாபாரத்தில் இறங்குனே.

அதே சமயம் நான் தினமும் செல்லும் கோயிலுக்கு சென்று வாசிக்கும் என் கலையையும் விடல. அங்கையும் கொஞ்ச நேரம் போய்டு தான் வருவேன். என்னிடம் ஓரளவு சேமிப்பு இருக்கு. அதை நான் உட்கார்ந்து சாப்பிட்டா என் குழந்தைகளின் படிப்பு மற்றும் வருங்கால தேவைக்கு இல்லாம போயிடும். அதெல்லாம் கருத்தில் வச்சு தான் களத்தில் இறங்கினேன். சுமார் இரண்டரை மாசத்துக்கு மேல சப்பாத்தி தான் வித்தேன். இப்ப காய்கறி விலை ஏற்றத்தால் அதை தொடர்ந்து செய்ய முடியல.

பிளம்பிங் தொழில்
பிளம்பிங் தொழில்

எனக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கிற எலெக்ட்ரிசன் மற்றும் பிளம்பிங் தொழில் செஞ்சுகிட்டு இருக்கேன். மனசு இருந்தா போதும் எந்த தொழிலும் செய்யலாம், தப்பே இல்ல. எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம். அடுத்தவங்க நினைச்சு நாம நம்மல ஏமாத்திக்க கூடாது. நல்லத தைரியமா செய்யனும் என்றார்" நம்பிக்கையாக.

அடுத்த கட்டுரைக்கு