Published:Updated:

`சொந்தக் காசில் பயணிகளுக்கு இலவச சேவை!'- நெகிழவைக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

தனியார் பேருந்துகளின் இலவச சேவை
தனியார் பேருந்துகளின் இலவச சேவை

நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி, தனியார் பேருந்துகள் இலவச சேவையைத் தொடங்கியிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுமுடக்கத்தில், கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவைகள் 60 சதவிகித பயணிகளுடன் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்பின்னர், ஜூன் 9 -ம் தேதி முதல் தனியார் பேருந்து சேவைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

பேரூந்துகளின் இலவச சேவை
பேரூந்துகளின் இலவச சேவை

முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளை மட்டும் அனுமதித்து, 60 சதவிகித பயணிகளைக்கொண்டு தனியார் பேருந்துகள் இயக்கிட அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், ஒரே மண்டலத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்கமுடியும் என்பது போன்ற பல்வேறு காரணங்களால் பேருந்துகளை இயக்கினால் உரிய வருவாய் இன்றி நஷ்டம் ஏற்படும் என்பதால், பல்வேறு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

`எல்லோரும் டூ-வீலருக்கு மாறிட்டாங்க; எங்களுக்குதான் நஷ்டம்!' - தனியார் பேருந்து உரிமையாளர்

நாகை தனியார் பேருந்து!

இந்நிலையில், நாகை மாவட்டம் சிதம்பரம் - சீர்காழி -பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் தனியார் பேருந்து ஒன்று கொரோனா பொதுமுடக்கத்திலும் தங்களது பயணிகளுக்கு உதவிட நிர்வாகம் முடிவுசெய்தது. இதற்காக, கடந்த 17-ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை 8 நாள்கள் கொள்ளிடம் சீர்காழி, பட்டவர்த்தி, மயிலாடுதுறை வரை இயக்கப்படுகிறது. இந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் ஏதுமின்றி இலவசமாக இயக்கப்பட்டுவருகிறது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி, 60 சதவிகித பயணிகளை மட்டும் அமரவைத்து பேருந்து சேவை செய்யப்படுகிறது. கொரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தங்களால் இயன்ற உதவியைச் செய்திடும் தனியார் பேருந்தின் சேவையை இப்பகுதி மக்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

தூத்துக்குடியில் இலவச சேவை

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும், `எஸ்.எஸ்.ஆர்.பி.எஸ்’ என்ற தனியார் பேருந்து நிறுவனம், கோவில்பட்டி - சங்கரன்கோவில், புளியங்குடி- தென்காசி மற்றும் ராஜபாளையம் வரையிலான வழித்தடத்தில் 7 பேருந்துகளை இயக்கிவருகிறது. இந்த 7 பேருந்துகளிலும், 10 நாள்களுக்கு மக்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு சேவை துவக்கப்பட்டுள்ளது.

பேரூந்துகளின் இலவச சேவை
பேரூந்துகளின் இலவச சேவை

இதுகுறித்து, அப்பேருந்து நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பில் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் எங்க பேருந்துகள் ஓடும் வழித்தடத்தில் ஏறுபவர்கள் 90 சதவீதம் பேர், தினக்கூலித் தொழிலாளர்கள்தான். விவசாயக்கூலி, பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை, பஞ்சாலை போன்ற கம்பெனிகளில் வேலை செய்பவர்கள்தான். இவர்கள் அனைவருமே சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பிழைப்பிற்காக பல கி.மீ தூரம் பயணித்து வேலைக்குச் சென்றுவருபவர்கள்.

தற்போதைய கொரோனா ஊரடங்கில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளதால், இத்தொழிலாளர்கள் இரண்டு மாதத்திற்குப் பிறகு, கடந்த சில நாள்களாகத்தான் வேலைகளுக்குச் செல்கின்றனர். ஏற்கெனவே ஊரடங்கால் இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் பழையபடி வேலைக்குச் சென்று, கையில் மீண்டும் காசு கிடைக்க 10 நாள் வரையாவது ஆகும். அவர்களுக்கு உதவும் வகையில், இந்த இலவசப் பயணம் என்ற முடிவினை எடுத்துள்ளோம். அரசின் விதிமுறைப்படி, ஒவ்வொரு பேருந்திலும் 35 பயணிகள் மட்டுமே ஏற்றிக்கொள்ளப்படுவார்கள்.

`நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது!'- தனியார் பேருந்து உரிமையாளரை நெகிழ வைத்த மாணவர்கள்

உதாரணமாக, ஒரு நிறுத்தத்தில் ஒரு நபர் இறங்கினால், அந்த இடத்தில் மற்றொருவர் ஏற்றிக்கொள்ளப்படுகிறார். இதில், கூலித் தொழிலாளிகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றனர். கொரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தங்களால் இயன்ற உதவியைச் செய்திடும் தனியார் பேருந்துகளின் இலவச சேவையை பொதுமக்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு