Published:Updated:

கஜா புயல்ல வீடு போச்சு; இப்போ பட்டினியால உசுரே போகப்போகுது! - தவிக்கும் ஆதரவற்ற குடும்பம்

ரவி - உஷா தம்பதியினர்
ரவி - உஷா தம்பதியினர்

`வீட்டின் நான்கு புறமும் சுவர்கள் இன்றி தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதியில்லை. மூடிக்கொள்ள கதவுகள் இல்லை.'

நாகை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டது கஜா புயல். பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானது. இதையடுத்து, ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது அறிவித்தார். ஆனால், இன்றுவரை ஒரு வீடுகூட கட்டித் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டைக் கேட்க முடிகிறது. அதே நேரத்தில் விகடனும் ரஜினி மக்கள் மன்றமும் மிகவும் பாதிக்கப்பட்ட சிலருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்துள்ளன. கஜா புயல் வீசி ஒரு வருடம் நிறைவடைந்த போதிலும், அதன் வலி இன்னும் தீரவில்லை என்பதற்கு ரவி குடும்பமே சாட்சி.

வீடு
வீடு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு திருமாலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவி - உஷா தம்பதியினர். பிறவியிலிருந்தே வாய் பேச முடியாத உஷாவுக்கும் ரவிக்கும் மதுஸ்ரீ, காமாட்சி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் 7 வயதாகும் மதுஸ்ரீ, படுத்த படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இளைய மகள் காமாட்சியோ கைக்குழந்தை. இந்தச் சூழலில் தினக்கூலியான ரவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் ஒருகாலும் கையும் பாதிப்புக்கு உள்ளாகி தனது குடும்பத்தின் அன்றாடத் தேவைக்கு அல்லல்பட்டு வருகிறார்.

கஜா புயல்: கலெக்டருக்கு ஓட்டிய கார் வாடகை கிடைக்கலை! தற்கொலைக்கு முயன்ற டிரைவர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள்,``2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் சேதமடைந்த இவர்களின் வீடு மீண்டும் புனரமைக்கப்பட முடியாமல், வீட்டின் நான்கு புறமும் சுவர்கள் இன்றி தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளிலிருந்து விஷ ஜந்துக்கள் வீட்டின் உள்ளே வந்து செல்லும் பரிதாப நிலையே காணப்படுகிறது. மின்சார வசதியில்லை. மூடிக்கொள்ள கதவுகள் இல்லை. வெறிச்சோடிய வீடாய் படுத்த படுக்கையாய் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணும், ஆறு மாதங்களே ஆன மற்றொரு பெண் குழந்தையும் எவ்வித பாதுகாப்புமின்றி வெறும் தென்னங்கீற்றால் வேய்ந்த கூரையின் நடுவில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

உஷா
உஷா

தற்போது அண்டை வீட்டார்கள் ஆதரவு கரம் நீட்டினாலும் அவர்களின் பாதுகாப்புக்கும் மறுவாழ்வுக்கும் ஓர் கான்கிரீட் வீடும், உதவித்தொகையுமே அவர்களை நிரந்தரமாகக் காக்கும். கஜா புயல்ல வீட்டை இழந்தாங்க. இப்போ, போதிய வருமானமும் இல்லாம ரொம்பக் கஷ்டப்படுறாங்க.

ரவியின் குடும்பம், தமிழகத்தின், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வசிக்கும் அதே பகுதி என்பதால், அரசின் உதவியை விரைவில் அமைச்சர் பெற்றுத்தந்து ஆதரவற்றுக் கிடக்கும் ரவியின் குடும்பத்தைக் காக்க வேண்டும்’’ என்பதே அப்பகுதி மக்கள் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு