Published:Updated:

நாகப்பட்டினம்: `ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம்!’ - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வேண்டும் என மத்திய ஆய்வுக்குழுவிடம் நாகப்பட்டினம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

``புயல், மழை தாக்கத்தால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 82,000 ஹெக்டேர் நெற்பயிர்களும், 550 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின் விரைவில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்’’ என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்

விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை

நிவர், புரெவி புயல்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டிருந்தன. கூடுதல் பாதிப்புக்கு உள்ளான நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கண்ணி மற்றும் வடக்கு பனையூரில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று சேதமடைந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகளைக் கேட்டறிந்தனர். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட தோட்டப் பயிரான கத்தரி, புடலை, பாவை, கிழங்கு வகைகள், பூ வகைகளைப் பார்வையிட்டனர்.

அப்போது `கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் மழை வெள்ள நீரில் மூழ்கிடுச்சு’ என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ``பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும்" என்று விவசாயிகளும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணனும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அஷூதோஸ் அக்னி கோத்ரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை

ஆய்வுக்குப் பின் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பேசுகையில், ``புயல் மழை தாக்கத்தால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 82,000 ஹெக்டேர் நெற்பயிர்களும், 550 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும்  பாதிக்கப் பட்டுள்ளன. மத்திய அரசு அறிக்கைக்குப் பின் விரைவில் விவசாயிகளுக்கு உரிய  நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு