Published:Updated:

`என்னால முடிஞ்ச உதவி இது!' - கொரோனா நிதி வழங்கி நெகிழ வைத்த மூன்றாம் வகுப்பு மாணவன்

நிதியை வழங்கும் சுஹாஷன்
நிதியை வழங்கும் சுஹாஷன்

ஆன்லைன் வகுப்புக்காக 'டேப்' வாங்க சிறுக சிறுக சேர்த்த ரூ.10,135-ஐ முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நாகை ஆட்சியரிடம் வழங்கினான். உதவிக்கரம் நீட்டிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

``கொரோனா நிவாரண நிதியைத் தாராளமாக அனைவரும் வழங்க வேண்டும்" எனத் தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று பலரும் ஏராளமான நிதியை வழங்கி வருகின்றனர். பிரபலங்கள் தொடங்கி சாமானியன் வரை இந்த அசாதாரண சூழலில் தோள் தந்து நிற்பது மனிதத்தின் மீது நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதை இன்னும் அதிகமாக்கியிருக்கிறார் நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் சுஹாஷன். தனது ஆன்லைன் வகுப்புக்கு டேப் வாங்குவதற்காகத் தான் சேர்த்து வைத்திருந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

மாணவன் சுஹாஷன்
மாணவன் சுஹாஷன்
மயிலாடுதுறை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்துவதில் தாமதம்?! - சமூக ஆர்வலர்கள் வேதனை

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த சக்திவேல் - சீதா தம்பதியினரின் மகன் சுஹாஷன். ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சுஹாஷன் தன் ஆசிரியர் சுப்பிரமணியன் அறிவுரைப்படி ஆன்லைன் படிப்புக்காக டேப் வாங்குவதற்கு தாய் தந்தையிடம் பணம் வாங்கி சஞ்சயிகா திட்டத்தில் சிறுக சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார்.

கொரோனா நிவாரணத்துக்கு பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொலைக்காட்சிகளில் பார்த்த சிறுவன் தானும் நிதி வழங்க வேண்டும் எனப் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து தன் பெற்றோருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற சிறுவன் சுஹாஷன் டேப் வாங்குவதற்கு தான் சேர்த்து வைத்திருந்த ரூ.10,135-யைக் காசோலையாக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர்
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர்

`உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பிடியில் பலர் உயிரிழந்து வரும் நிலையில் உயிர் முக்கியமா, டேப் முக்கியமா என்று பார்த்தேன். உயிர்தான் முக்கியம் என்பதால் நான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வருக்கு வழங்கினேன்' எனச் சிறுவன் சுஹாஷன் தெரிவித்துள்ளார். காசோலை வழங்கும் நிகழ்வில் மாணவரின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு