நாகையில் உயிருடன் இருக்கும் வாக்காளரை நீக்கல் பட்டியலில் சேர்த்த அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீக்கப்பட்ட பெண் வேட்பாளர் பெயர் மீண்டும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாகை நகராட்சியில் 4-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தவல்லி நேற்று நகராட்சியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த வந்தார். அப்போது வேட்புமனுவை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகிருஷணன், வாக்காளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இல்லை என்றும், கடந்த 05.01.2022 அன்று நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியதால் இவ்விவகாரம் நாகையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உயிருடன் இருக்கும் தன்னை இறந்தவர் பெயர் பட்டியலில் சேர்த்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும். மேலும் தன் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து 4-வது வார்டில் போட்டியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்குக் காரணமான, வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தலுக்காக 4-வது வார்டு சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர், தவறு செய்தமைக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர், 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமிர்தவல்லி பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அந்த வார்டில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க வேட்பாளர் பெயர் மீண்டும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.