Published:Updated:

`தெருவோர மக்களின் உணவுக்கு வழிகாட்டிய கமிஷனர்!' -அசத்திய நாகர்கோவில் மாநகராட்சி

உணவு வழங்கும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு
உணவு வழங்கும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு

மதியம் உணவு வழங்கிவிட்டு மாலைக்குள் அந்த அடையாள ரிப்பனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரம் மாதம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. நேற்று ஒருநாள் ஊரடங்கு சமயத்தில் பல்வேறு சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் அரங்கேறின. நாகர்கோவிலில் ரோட்டோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முயற்சி எடுத்தார்.

தெருவோரம் வசிப்போருக்கு உணவு வழங்க முன்வந்த சேவா பாரதி, மனிதநேய மக்கள் கட்சியினரை ஒருங்கிணைத்து அவர்கள் எந்தப் பகுதியில் உணவு வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

உணவு வழங்கும் தன்னார்வலர்களின் கையில் நாகர்கோவில் மாநகராட்சி பேரிடர் வாலன்டியர்ஸ் என்ற அடையாள ரிப்பன் கட்டப்பட்டது. மதியம் உணவு வழங்கிவிட்டு மாலைக்குள் அந்த அடையாள ரிப்பனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

உணவு வழங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்த கமிஷனர் சரவணகுமார்
உணவு வழங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்த கமிஷனர் சரவணகுமார்

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை பேருந்தில் வந்ததாகவும், இனி கொல்லம் வரை நடந்து செல்வதாகவும் கூறி நடக்கத் தொடங்கினார். நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் அவருக்கு டெம்பரேச்சர் சோதனை செய்ததுடன் கேரளத்திற்கு அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச்செல்லும் வாகனத்தில் அந்த நபரை ஏற்றி அனுப்பிவைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு நாடு முழுவதும் மாநில மாவட்ட எல்லைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுபோல நாகர்கோவிலில் ஒரு தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் காந்தாரி அம்மன் கோயில் தெருவில் நுழைவுப் பகுதியை மூடி வைத்து சுய தடுப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள். அந்தத் தெரு எல்லையில் கயிறு கட்டி 'தங்கள் தெருவே சாராத எவரும் நுழைவதை தவிர்க்கவும்' என்று பதாகைகளில் எழுதி வைத்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க தெருவுக்கு சீல் வைத்த மக்கள்
கொரோனா பரவலைத் தடுக்க தெருவுக்கு சீல் வைத்த மக்கள்

மேலும் தங்கள் தெரு நுழைவுப் பகுதியில் மஞ்சள் கலந்த கிருமி நாசினி கரைசல் வைத்துள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்று வந்தால் உள்ளே நுழையும்போது இந்தத் தண்ணீரில் கை கழுவிவிட்டு வரவேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு