Published:Updated:

` இனி துப்புரவாளர் இல்லை, தூய்மைப் பணியாளர்!'- நெகிழவைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்

எங்களை துப்புரவுப் பணியாளர்கள் என அழைப்பதை கெளரவக் குறைவாக உணர்ந்தோம். மேலும், துப்புரவுப் பணியாளர் என்ற வார்த்தை எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

நாகர்கோவில் மாநகராட்சியில் சாக்கடையில் தேங்கியுள்ள மண்ணை அகற்றுதல், வீடு வீடாகக் குப்பைகளைச் சேகரித்தல். சாலையோர குப்பைத் தொட்டிகளில் சேரும் குப்பைகளை லாரியில் ஏற்றி குப்பைக் கிடங்குக்குக் கொண்டு செல்லுதல், குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் போட்டு பராமரித்தல் என துப்புரவுப் பணியாளர்களின் பணி அளப்பரியது.

ஆணையருடன் தூய்மைப் பணியாளர்கள்
ஆணையருடன் தூய்மைப் பணியாளர்கள்

இந்தநிலையில், தங்களை துப்புரவுப் பணியாளர்கள் என அழைப்பது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது என அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, துப்புரவுப் பணியாளர்களை `தூய்மைப் பணியாளர்' என அழைக்கலாம் என ஆணையாளர் சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதனால், பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தூய்மை நலப் பணியாளர் சங்கத் தலைவர் ராஜா கூறுகையில், ``எங்களை துப்புரவுப் பணியாளர்கள் என அழைப்பதை கெளரவக் குறைவாக உணர்ந்தோம். மேலும், துப்புரவுப் பணியாளர் என்ற வார்த்தை எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

ராஜா
ராஜா

இனி தமிழகம் முழுவதும் உள்ள துப்புரவுப் பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கும்விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடமும் மனு அளித்துள்ளோம். நாகர்கோவில் மாநகராட்சியில் சுமார் 268 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 525 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சியின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் 1,100 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோல, தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளன. அவற்றை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். இது சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

ஆணையாளர் சரவணகுமார்
ஆணையாளர் சரவணகுமார்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமாரிடம் பேசினோம். ``மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய பெயர்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது போன்று சமூகத்திலும் சில பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம். எனவே, துப்புரவுப் பணியாளர்களின் மன சஞ்சலத்தை உணர்ந்து அவர்கள் பெயரை `தூய்மை நலப் பணியாளர்கள்' என மாற்றி தீர்மானம் போட்டுள்ளோம். அந்தத் தீர்மானத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.