Published:Updated:

முதியவருக்கு நேர்ந்த துயரம்.. சிசிடிவி வைத்து அதிரடி காட்டிய நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர்!

புகார் அளிக்க பொருத்தப்பட்டுள்ள மைக்குடன் கூடிய கேமரா
புகார் அளிக்க பொருத்தப்பட்டுள்ள மைக்குடன் கூடிய கேமரா

அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற புகார்களை இந்த கேமரா முன் நின்று நாம் பேசினால் மட்டும் போதும். நாம் பேசுவது நாகர்கோவில் எஸ்.பி அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கும், மாநகராட்சி அலுவலகத்திற்கும் சென்று விடும்.

வெளியூர் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பறைகளில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சுத்தம், சுகாதாரம் இருக்காது. கட்டணம் எவ்வளவு என போர்டு இருக்காது. அப்படி போர்டு இருந்தாலும் அதில் குறிப்பிட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தல் எனப் பிரச்னைகள் ஏராளம். இதற்கெல்லாம் தீர்வுகாணும் விதமாக வடசேரி பேருந்து நிலையத்தில் புகார் அளிக்கும் நவீன வசதியை ஏற்படுத்தியிருக்கிறது நாகர்கோவில் மாநகராட்சி. மைக்குடன் இணைந்துள்ள கேமரா ஒன்று கழிப்பறை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

கட்டண கழிப்பறை
கட்டண கழிப்பறை

அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற புகார்களை இந்த கேமரா முன் நின்று நாம் பேசினால் மட்டும் போதும். நாம் பேசுவது நாகர்கோவில் எஸ்.பி அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கும் மாநகராட்சி அலுவலகத்திற்கும் சென்று விடும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வடசேரி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இங்குள்ள கட்டணக் கழிப்பிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியரிடம் அங்கிருந்த பணியாளர் அதிக கட்டணம் வசூலித்துள்ளார்.

இதுகுறித்து அந்த முதியவர் கேட்டதற்குப் பணம் வசூலிப்பவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் மாநகராட்சி கமிஷனரிடம் முறையிட்டுள்ளார். கமிஷனர் விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்தது உண்மை என்பது தெரியவரவே சம்பந்தப்பட்ட ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அந்த நபரை அங்கு பணியில் அமர்த்தக்கூடாது எனவும் கமிஷனர் உத்தரவிட்டார்.

கட்டணக் கழிப்பறை
கட்டணக் கழிப்பறை

இதுபோன்று பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் புகார் அளிக்க ஏதுவாக மைக்குடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் எஸ்.பி. அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. வடசேரி கட்டணக் கழிப்பறை கேமராவும் எஸ்.பி. அலுவலகக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த கேமரா முன்பு வந்து புகார் கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு