Published:Updated:

விதிமீறல்களைச் சரிசெய்யாமல் திறக்கப்படும் கடைகள்! - ஆளுங்கட்சிக்காக விதியை மீறுகிறார்களா அதிகாரிகள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாகர்கோவிலில் சீல்வைக்கப்பட்ட கடைகள்
நாகர்கோவிலில் சீல்வைக்கப்பட்ட கடைகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக, கடந்த ஆட்சியில் சீல் வைக்கப்பட்ட கடைகள், ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக மீண்டும் திறக்கப்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்த சரவணகுமார், ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிரடிகாட்டியே மக்களிடம் செல்வாக்கு பெற்றார். தனியார் கடைகளை, வணிக வளாகங்களை மட்டுமல்ல... தேவையென்றால் அரசுக் கட்டடங்களையே இடித்து அகற்றினார். நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் சாலை விரிவாக்கத்துக்காக ஒரு பெட்ரோல் பங்க், போக்குவரத்துப் பணியாளர்களின் மருத்துவமனை உள்ளிட்டவற்றை இடித்து அகற்றினார்.

வடசேரியில் சாலை விரிவாக்கத்துக்காக மாநகராட்சிக்கு வருவாய் கொடுத்துக்கொண்டிருந்த 92 பழைய கடைகளை ஒரே நாளில் அகற்றினார். விதிகளை மீறி கட்டப்பட்டதற்காக, அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வில் இருந்தவர்களின் கடைகளைக்கூட விட்டுவைக்காமல் சீல் வைத்தார். சீல் வைக்கப்பட்ட கடைகள் விதிமுறைப்படி மாற்றி அமைக்கப்பட்ட பிறகு திறக்க அனுமதியளிக்கப்பட்டது.  

தஞ்சை: 60 நாள்களில் ரூ.150 கோடி அரசு இடம் மீட்பு! - அதிரடிகாட்டும் மாநகராட்சி ஆணையர்

நாகர்கோவிலிலிருந்து சரவணகுமார் மாறுதலான பிறகு வந்த கமிஷனர் ஆஷா அஜித்தும் அதே அதிரடியைக் கையிலெடுத்து சில வணிக வளாகங்களுக்கு சீல் வைத்தார். இந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட கடைகள் மாற்றி அமைக்கப்படாமலேயே, திறந்து செயல்பட அனுமதி அளித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிக்குளத்தில் திறக்கப்பட்ட கடைகள்
செட்டிக்குளத்தில் திறக்கப்பட்ட கடைகள்

கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஶ்ரீராம், ``அ.தி.மு.க ஆட்சியில் நடந்த அதே அதிரடி, தி.மு.க ஆட்சியிலும் தொடரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், செட்டிக்குளத்தில் மாநகராட்சி சீல் வைத்த 17 கடைகளை, விதிமுறைகளை மீறித் திறக்க தி.மு.க அரசு தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தலைமைச் செயலகத்திலுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். அதில் தி.மு.க முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சனின் கணவரும், வணிகர் சங்க நிர்வாகியுமான டேவிட்சனின் கடையும் இருக்கிறது. ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த செட்டிக்குளம் சந்திப்பில் விதிமுறைகளை மீறிச் செயல்படும் கடைகளை அகற்றி, அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும்’ என்ற எங்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் அந்தக் கடைகள் சீல் வைக்கப்பட்டன. அதிலும், அந்த இடத்தை லீசுக்குக் கொடுத்திருக்கும் கோயில் நிர்வாகமும் சாலை விரிவாக்கத்துக்காக நிலத்தை விட்டுக்கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட கடைகளை மீண்டும் செயல்பட அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். நாகர்கோவில் மாநகரத்தில் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டிருக்கும் மற்ற கடைகளைச் சேர்ந்தவர்களும், இதே முறையைப் பின்பற்றி ஆளுங்கட்சி ஆசியுடன் தங்கள் கடைகளைத் திறக்கும் முனைப்பில் இருக்கிறார்கள். இதற்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் கோர்ட்டுக்குச் சென்று தடையாணை பெற வேண்டும். இல்லையென்றால், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வழக்கு தொடுப்போம்’’ என்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ், ஆணையாளர் ஆஷா அஜித், டேவிட்சன், ஸ்ரீராம்
அமைச்சர் மனோ தங்கராஜ், ஆணையாளர் ஆஷா அஜித், டேவிட்சன், ஸ்ரீராம்

இது பற்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் டேவிட்சனிடம் பேசினோம். ‘``சிறிய மாநகரமான நாகர்கோவிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மாநகராட்சி ஆகியிருக்கிறார்கள். அதில், 2019 மாநகராட்சி சட்டத்தை அமல்படுத்த முயல்கிறார்கள். `பழைய கட்டடங்களுக்கு இந்த விதிமுறைகளை அமல்படுத்தாதீர்கள். இனி புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் அந்த விதிமுறைகளை அமல்படுத்துங்கள்’ என்று வர்த்தகர் சங்க நிர்வாகி என்ற முறையில் வலியுறுத்தினேன். இதனால், என்னைப் பழிவாங்கும் நோக்கில் என் கடைக்கு சீல் வைத்தார்கள். அது பற்றி சென்னையிலுள்ள அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் விளக்கிக் கூறினேன். இதையடுத்து, கடந்த ஆட்சியிலேயே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இப்போதுதான் கடை திறக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். செட்டிக்குளத்தில் 80 சதுர அடி கொண்ட சிறிய கடைகளைக்கூட சீல் வைத்திருக்கிறார்கள். 2019 மாநகராட்சி சட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள். அதுபோல, நாகர்கோவில் மாநகராட்சிக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்திடம் இது பற்றிக் கேட்டதற்கு, ``அந்தக் கடைகள் தொடர்பாக கவர்மென்ட்டிலிருந்து ஒரு ஆர்டர் போட்டிருக்கிறார்கள். அந்த ஆர்டரில், `மூன்று மாதங்களில் அரசு விதிப்படி அந்தக் கட்டடத்தைக் கட்ட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள். `மூன்று மாதங்களில் விதிப்படி மாற்றி அமைக்காமல் இருந்தால், சீல் வைக்கலாம்’ என்று அந்த ஆர்டரில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஆர்டரின் அடிப்படையில் அந்தக் கடைகளைத் திறந்திருக்கிறார்கள்’’ என்றார்.

சீல்
சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேட்டதற்கு, ‘``மாநகராட்சியால் சில கடைகள் அடைக்கப்பட்டன. ஒருசில விதிமுறைகளை மீறியதாக அதற்கு மாநகராட்சி சார்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது. விதிமுறைக்கு உட்பட்டு கடைகளைச் சீரமைப்பதாக அவர்கள் உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவித விதிமுறை மீறலுக்கும் தி.மு.க அரசு இடம் கொடுக்காது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு