Published:Updated:

`கேரளாவின் விக்டர்ஸ் சேனல் டு நாகர்கோவில் மாநகர ஆணையர்’ -பொறுப்பேற்றார் ஆஷா அஜித்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆஷா அஜித்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆஷா அஜித்

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவேன் என்றார், நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையர் ஆஷா அஜித்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சரவணகுமார் செயல்பட்டுவந்தார். இவரது பதவிக் காலத்தில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்திருந்தார். பாதாள சாக்கடைப் பணிகள், புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டங்களைத் துரிதப்படுத்தினார். அவரது செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அரசியல் கட்சி தலைவருக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவது போன்று சரவணகுமாருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்படும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.

இந்த நிலையில், நாகர்கோவில் கமிஷனராக இருந்த சரவணகுமார் மாற்றப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரியான ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், பல தரப்பினர் சரவணகுமாரை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், ஆஷா அஜித் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முதலில், அவர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவை சந்தித்தார். பின்னர், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் வந்தார். அவரை மாநகராட்சி நகர்நல அலுவலர் கிங்சால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், ஆணையர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

யார் இந்த ஆஷா அஜித்? 

பதவி ஏற்பு விழாவில்
பதவி ஏற்பு விழாவில்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர், ஆஷா அஜித். கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என பிசியாக இயங்கியவர். 2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றிபெற்றார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்த ஆஷா அஜித், பின்னர் விடுமுறையில் இருந்தார். இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராகப் பொறுப்பேற்றுள்ளார்.

நாகர்கோவில் ஆணையர் `அதிரடி’ சரவணக்குமார் திடீர் மாற்றம்! பின்னணி என்ன?

ஆஷா அஜித்தின் கணவர் விஷ்ணு சந்திரன், கடந்த ஆண்டு நாகர்கோவில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்துவந்தார். இப்போது தூத்துக்குடியில் பணியாற்றிவருகிறார். ஆஷா அஜித்தின் தந்தை அஜித் குமார், கேரள மாநில தகவல் மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநகராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷா அஜித் ias
ஆஷா அஜித் ias

கொரோனா பரவல் காரணமாக மாஸ்க் அணிந்து பொறுப்பேற்றுக்கொண்ட ஆஷா அஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாகர்கோவிலுக்கு இப்போதுதான் வந்துள்ளேன். நாகர்கோவிலை முழுமையாக அறிந்துகொண்டு, தேவையான வளர்ச்சிப்பணிகளைச் செயல்படுத்துவேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைதான் இப்போது பிரதான பணி. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு