Published:Updated:

நாகர்கோவில் ஆணையர் `அதிரடி’ சரவணக்குமார் திடீர் மாற்றம்! பின்னணி என்ன?

ஆணையர் சரவணகுமார்
ஆணையர் சரவணகுமார்

நாகர்கோவில் கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தி.மு.க சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் சரவணகுமார் மாற்றப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் நகராட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சமயத்தில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஏற்கெனவே கமிஷனராக இருந்த சரவணகுமார், மாநகராட்சியின் முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் நகரின் சாலை விரிவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி அதிரடியாகச் செயல்பட்டவர்.

கொரோனா களப்பணியில் கமிஷனர் சரவணகுமார்
கொரோனா களப்பணியில் கமிஷனர் சரவணகுமார்

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கார் ஸ்டாண்டுகள், பெட்ரோல் பங்க், போக்குவரத்து கழக மருத்துவமனைகளை அகற்றி சாலையை விசாலமாக்கினார். வடசேரி பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளையே இடித்து அகற்ற வேண்டிய நிலை வந்தபோதும் தயங்காமல் சாலை விரிவாக்கத்துக்காக 90-க்கும் மேற்பட்ட கடைகளை அப்புறப்புறப்படுத்தினார்.

நெருக்கடி மிகுந்த கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியை விசாலமாக மாற்றிய பெருமை சரவணகுமாருக்கு உண்டு. கோட்டாறு ரயில் நிலைய சாலை விரிவாக்கம் செய்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மாநகராட்சி அனுமதி இன்றியும் சட்டவிரோதமாகவும் கட்டப்பட்ட சாதாரண கடை முதல் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் வணிக வளாகங்கள் வரை சீல் வைத்து அதிரடி காட்டினார். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு சீஸன் கடைகளை குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அதை வேறு நபர்களுக்கு அதிக தொகைக்கு குத்தகைக்கு விட்டு சம்பாதித்துவந்தனர்.

`திருடன் பையில் கொள்ளாத பணம்; சிதறிய லட்சங்கள்!’ -நாகர்கோவில் பழக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையை மாற்ற கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கன்னியாகுமரி சீஸன் கடைகளை ஏலம் விட சிறப்பு அதிகாரியாக சரவணகுமாரை நியமித்தார். அனைத்து வியாபாரிகளுக்கும் நேரடியாகவே கடைகளை வழங்கி கன்னியாகுமரி பேரூராட்சிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாயை ஈட்டிக்கொடுத்தார் சரவணகுமார்.

ஃபிளக்ஸ் போர்டே இல்லாத மாநகராட்சியாக நாகர்கோவிலை உருவாக்கினார். அதுமட்டுமல்லாது சாலை ஓரங்களில் எந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இல்லாத நிலையை உருவாக்கினார். அரசியல் கட்சியினரும் புதிதாகக் கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கேட்டு மாநகராட்சியை அணுகாத நிலை ஏறட்டது. சில அரசியல் கட்சியினர் பட்டா பூமியில் கொடிக்கம்பங்களை அமைக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்
ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்

கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை அடக்கம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் நாகர்கோவில் மாநகராட்சி எரிவாயு தகனமேடையில் பொம்மை ஒன்றை எரித்து இறந்தவர்கள் உடல் மூலம் கொரோனா பரவாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நாகர்கோவில் மாநகரத்தில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு அதிரடிகளை அரங்கேற்றிய கமிஷனர் சரவணகுமார் திடீரென மாற்றப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனத் தி.மு.க சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் சரவணகுமார் மாற்றப்பட்டுள்ளார்.

`தெருவோர மக்களின் உணவுக்கு வழிகாட்டிய கமிஷனர்!' -அசத்திய நாகர்கோவில் மாநகராட்சி

மேலும், மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகள் கூறும்போது,``தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் நாகர்கோவிலில் கமிஷனராகப் பணியாற்றியதால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு