Published:Updated:

`ஸ்பாட்டிலேயே செயற்கைக் கால்!' - மாற்றுத்திறனாளிகளை நெகிழவைத்த தொண்டு நிறுவனம்

செயற்கைக் கால்கள் தாயாரிக்க அளவெடுக்கும் பணி
செயற்கைக் கால்கள் தாயாரிக்க அளவெடுக்கும் பணி

`செயற்கைக் காலின் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்து, நாங்கள் இதைச் செயல்படுத்துகிறோம். அடுத்தகட்டமாக செயற்கைக் கை தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம்'

கால்களை இழந்தவர்களுக்கு அவர்கள் கண் முன்னாலேயே கால்கள் தயாரித்து வழங்கும் பணியைச் செய்து வருகிறது நாகர்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம். நாகர்கோவில் டதி பெண்கள் மேனிலைப் பள்ளியில் வைத்து செயற்கைக் கால் தாயாரித்து உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தி நடக்க வைக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் இழந்த கால்களில் செயற்கைக் கால் பொருத்துவதற்காக அளவெடுக்கப்படுகிறது. பின்னர் மிஷின் மூலம் கால்கள் ஒன்றிணைக்கப்பட்டு உடனடியாகப் பொருத்திவிடுகிறார்கள். இதுவரை ஊன்றுகோல் உதவியுடன் நடந்தவர்கள் செயற்கைக்காலுடன் நடக்கும்போது அவர்கள் கண்களில் ஏற்படும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது. பொதுவாக மருத்துவ முகாம்களை நடத்துவதை வழக்கமாகக்கொண்ட அமைப்புகள் மத்தியில், செயற்கைக் கால் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அரசிடம் செயற்கைக் காலுக்கு விண்ணப்பித்து சில ஆண்டுகள் கடந்த பிறகுதான் வழங்கப்படுகிறது என்பதால் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். இந்த முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாகவே செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன.

செயற்கைக் கால்கள் தயாராகின்றன
செயற்கைக் கால்கள் தயாராகின்றன

செயற்கைக் கால் தயாரித்து வழங்கும் திட்டத்தின் தலைவர் பிஜூ கூறுகையில்,``கால்கள் முழுமையாகவோ, முட்டிக்குக் கீழேயோ இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் வழங்க நாகர்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் முடிவு செய்தோம். முதல்கட்டமாக 150 பேருக்கு வழங்கத் திட்டமிட்டோம். அதிகப்படியான தேவைகள் இருப்பதால் மேலும் 60 கால்கள் வழங்க உள்ளோம். தமிழகம் மற்றும் கேரளத்தின் பல இடங்களிலிருந்து பயனாளிகள் வந்தார்கள். கால்களை இங்கேயே தாயரித்துக் கொடுக்கிறோம். செயற்கைக் கால்கள் தயாரிப்பதற்காக ஜெய்ப்பூரிலிருந்து மிஷின்கள் நாகர்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும், செயற்கைக் கால்களைத் தயாரித்து வழங்குவதற்கும் ஆள்கள் ஜெய்ப்பூரிலிருந்து வந்திருக்கிறார்கள்.

செயற்கை கால்களை போளிபோப்லின் பைப் மூலம் செய்கிறோம். இந்த பைப் எடை குறைவு என்பதுடன் நீடித்து உழைக்கக்கூடியது. தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தலாம். தண்ணீர் பட்டாலும் எதுவும் செய்யாது. ஒருகால் சராசரியாக ஒரு கிலோ முதல் ஒருகிலோ முந்நூறு கிராம் வரை இருக்கும். முட்டுக்கு கீழ் ஒரு செயற்கை கால் தயாரிக்க பன்னிரெண்டாயிரம் ரூபாய் ஆகிறது. முழு கால் செய்வதற்கு பதினெட்டாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை ஆகிறது.

பிஜூ
பிஜூ

ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று செயற்கை கால் தயாரித்து வழங்கும் முகாம் நடத்தினோம். அதில் நிறையபேர் வந்து பயனடைந்தார்கள். செயற்கை காலின் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்து நாங்கள் இதை செய்லபடுத்துகிறோம். அடுத்தகட்டமாக செயற்கை கை தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு