Published:Updated:

`லண்டனிலிருக்கும் மகள் வரவில்லை!’ - மன உளைச்சலில் சிறைக்குத் திரும்பும் நளினி?

nalini
nalini

லண்டனிலிருக்கும் மகளும் வரவில்லை. மாப்பிள்ளையையும் தேர்வு செய்யாமல் சிறைக்குத் திரும்புவதால், நளினி மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா, சிறையில் பிறந்தவர். லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்குத் திருமணம் செய்து வைக்க, ஆறு மாதங்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் நளினி விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை, சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஒரு மாதம் பரோல் பெற்றார் நளினி. 

nalini
nalini

ஜூலை 25-ம் தேதி காலை, வேலூர் பெண்கள் சிறையிலிருந்து வெளியில் வந்தார் நளினி. சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கிய நளினி, மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வார் என்றார்கள். நளினியுடன் அவரின் தாய் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் தங்கியிருந்தனர். 

நாள்தோறும் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்குச் சென்று நளினி கையெழுத்துப் போட்டுவந்தார். எந்த ஓர் அமைப்பையும் சந்திக்கக் கூடாது என்பன உட்பட 12 நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க நளினிக்குச் சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. ‘‘ஈழத்தமிழர் ஒருவரைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகிறார். மாப்பிள்ளை இலங்கையில் இல்லை என்றாலும் லண்டனில் வசிப்பவராகக்கூட இருக்கலாம்’’ என்று கூறியிருந்தார் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி.

nalini house
nalini house

ஆனால், திருமண ஏற்பாடுகளைத் தொடங்காமல் இருந்தனர். மேலும் ஒரு மாத பரோலை நீட்டிக்கக்கோரி நளினி உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகினார். ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டன. இந்த நிலையில், பரோல் காலம் இன்றுடன் முடிகிறது. பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கக்கோரி நளினி மீண்டும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் நளினியை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் தயாராகிவருகிறார்கள்.

இவ்வளவு நாள்கள் நளினி வெளியிலிருந்தும் அவரின் மகள் லண்டனிலிருந்து வரவில்லை. அவருக்குத் திருமணத்தில் தற்போதைக்கு விருப்பமில்லை. பெற்றோர் முழுமையாக விடுதலையான பிறகே, திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். இதுபற்றி நளினியிடமும் அவர் கூறியிருக்கிறார். மகள் கூறியதற்கு நளினி எதிர்ப்பு தெரிவித்ததுடன் உடனே இந்தியா வருமாறு சொல்லியிருக்கிறார். ஆனால் ஹரித்ரா லண்டனிலேயே இருக்கிறார். இந்தக் காரணத்தால்தான் மாப்பிள்ளையைத் தேர்வுசெய்யாமல் நளினி நேரம் எடுத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

nalini
nalini

இதுதொடர்பாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘வெளிநாடுகளில் இருப்பவர்களிடம்தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. இந்தியா வர அவர்களில் பலருக்கு விசா கிடைக்கவில்லை. தவிர, இலங்கையில் உள்ள நளினியின் மாமியாரும் வரவில்லை. நளினி-முருகன் விடுதலையாகி வருவதில் காலதாமதமாகும். அதுவரைக்கும் காத்திருக்காமல் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க நளினி ஆசைப்பட்டார்’’ என்றார். நளினி சிறைக்குத் திரும்புவதால் அவர் தங்கியிருக்கும் வீட்டு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு