Published:Updated:

`சிறையில் துன்புறுத்தல்; கருணைக் கொலை செய்திடுங்க!’- பிரதமருக்குக் கடிதம் அனுப்பிய நளினி

``சிறையில் என் கணவர் முருகனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இதற்கு எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்’’ என்று பிரதமருக்கு நளினி கடிதம் அனுப்பியுள்ளார்.

நளினி
நளினி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான முருகனும், அவர் மனைவி நளினியும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரையும் வழக்கறிஞர் புகழேந்தி இன்று மதியம் சிறையில் சந்தித்துப் பேசினார். 

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர், ``விடுதலை தாமதமாகிவருவதாலும் வேலூர் சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாலும் மனமுடைந்த நளினியும், முருகனும் கடந்த மூன்று நாள்களாகச் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

`லண்டனிலிருக்கும் மகள் வரவில்லை!’ - மன உளைச்சலில் சிறைக்குத் திரும்பும் நளினி?

கடந்த 27-ம் தேதி நளினி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், `29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறோம். பல கைதிகளை விடுதலை செய்துள்ளார்கள். நாங்கள் விடுதலையாவோம் என்ற நம்பிக்கை போய்விட்டது.

முருகன்
முருகன்

சிறையில் என் கணவரை கொடுமைப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னால் உயிர் வாழ முடியாது. எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோன்ற ஒரு கடிதத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் இன்று அனுப்பியுள்ளார் நளினி. மேலும், சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் கணவர் முருகனைச் சிறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

நளினி
நளினி

`தமிழகத்தில் உள்ள எந்தச் சிறையிலும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெங்களூரு சிறை அல்லது வேறு மாநில சிறைகளுக்கு மாற்றுங்கள்' என்று வலியுறுத்தி உள்துறைச் செயலருக்கும் நளினி கடிதம் அனுப்பியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பதால் இரண்டு பேரின் உடல்நிலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.