Published:Updated:

பாராட்டுச் சான்றிதழ்.. சன்மானம்!- ஆழ்துளைக் கிணறுகளை மூட புதிய யுக்தியைக் கையாண்ட தனியார் அமைப்பு

தமிழகத்தில் மூடாத பல ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது தெரியவந்து மூடப்பட்டுள்ளதோடு தகவல் கொடுத்தவர்களுக்கு வரும் 9-ம் தேதி பாராட்டுச் சான்றும், பரிசும் வழங்க இருக்கிறார்கள்.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு ( க. தனசேகரன் )

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயதுக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது. அதையடுத்து, மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்தது. பல சமூக அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் ஆழ்துளைக் கிணற்றை மூட முன்வந்தார்கள்.

ஆழ்துளைக் கிணறு மூடல்
ஆழ்துளைக் கிணறு மூடல்
க. தனசேகரன்

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் பற்றி தகவல் கொடுத்தால் தாங்களே நேரில் வந்து மூடிக் கொடுப்பதாக அறிக்கைகள் கொடுத்தார்கள். நாமக்கல் தலை மலை சேவா டிரஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டு அதில் மிகப் பெரிய வெற்றி கண்டிருக்கிறார்கள்.

அதாவது தமிழகத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து 9843059346,7010596664 என்ற எண்ணுக்குத் தகவல் கொடுத்தால் `சமூக நலனில் அக்கறைக் கொண்டவர் என்ற பாராட்டுச் சான்றும், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்' என்ற ஓர் அறிக்கை வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதையடுத்து, அந்த டிரஸ்ட்டுக்கு தமிழகத்தில் மூடாத பல ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது தெரியவந்து மூடப்பட்டுள்ளதோடு, தகவல் கொடுத்தவர்களுக்கு வரும் 9-ம் தேதி பாராட்டுச் சான்றும், பரிசும் வழங்க இருக்கிறார்கள்.

இதுபற்றி டிரஸ்ட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஸ், ``எங்களுடைய டிரஸ்ட் நாமக்கல்லைத் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. தலைமலை அடிவாரம் வரை அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்தது, எருமபட்டி சிவன் கோயில் அருகில் உள்ள குளம் தூர்வாரியது, வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைமலை கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களுக்கு காலை, மதியம் உணவு, தூய குடிநீர், மோர் வழங்குவது என இந்த டிரஸ்ட் மூலம் பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்துவருகிறோம்.

இந்த நிலையில், கடந்த வாரம் மணப்பாறையில் சுஜித் என்ற ரெண்டு வயதுக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இனி எந்தவொரு குழந்தைக்கும் இந்த துயரம் ஏற்படக் கூடாதென்று, குழந்தை விழுந்த அடுத்த நாளே ஆலோசனைக் கூட்டம் போட்டு தமிழகத்தில் பயன்பாடு இல்லாத மூடாத ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூட வேண்டும் என்று தீர்மானித்தோம். தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மூடாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி எங்களுடைய கைப்பேசி எண்ணுக்குத் தகவல் கொடுத்தால் சமூக நலனில் அக்கறைக் கொண்டவர் என்ற பாராட்டுச் சான்றும், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டோம்.

பரிசு வழங்கல்
பரிசு வழங்கல்
க. தனசேகரன்

அதையடுத்து திருவாரூர், அரியலூர், குளித்தலை, அவினாசி எனப் பல இடங்களிலிருந்து வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்தோடு தகவல் தெரிவித்தார்கள். உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்து மூடினோம். நாமக்கல், கரூர், சேலம் போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கு நேரடியாக நாங்களே சென்று அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து மூடியதோடு அந்த இடத்திலேயே எங்களுக்குத் தகவல் கொடுத்தவர்களுக்குச் சான்றும், பரிசுத் தொகையும் கொடுத்தோம்.

எங்களுக்குத் தகவல் கொடுப்பவர்கள் சான்றுக்காகவோ, பரிசுக்காகவோ கொடுக்கவில்லை. உண்மையில் சமூக அக்கறையோடு கொடுக்கிறார்கள். தமிழகத்தில் பயன்பாடு இல்லாத திறந்த ஆழ்துளைக் கிணறுகளே இருக்கக் கூடாது. தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்து தகவல் வந்துகொண்டே இருக்கிறது. வரும் 9-ம் தேதி நாமக்கல்லில் எங்களுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து தகவல் கொடுத்தவர்களுக்குச் சான்றும், பரிசுத் தொகையும் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்'' என்றார்.