Published:Updated:

அமெரிக்காவிலிருந்து வரவைக்கப்பட்ட ₹16 கோடி மருந்து; குழந்தை மித்ராவுக்கு நிறைவடைந்த சிகிச்சை!

சிகிச்சை பெரும் மித்ரா
சிகிச்சை பெரும் மித்ரா

``பெங்களூரு, `பாப்டிஸ்ட்' மருத்துவமனையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் மித்ராவுக்கு நல்லபடியாக சிகிச்சை நடந்து முடிந்தது. மக்களுடைய ஒத்துழைப்பாலும், பிரார்த்தனையாலும் மித்ரா நலமுடன் உள்ளார்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 16 கோடி ரூபாய் மருந்து குழந்தை மித்ராவுக்கு இன்று செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் - பிரியதர்ஷினி தம்பதியின் 2 வயதுக் குழந்தை மித்ரா. ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவைக் காப்பாற்ற `ஒருமுறை மரபணு மாற்று சிகிச்சை’ செய்ய வேண்டும் எனவும், அந்த சிகிச்சைக்காக, வெளிநாட்டிலிருந்து வரவைக்க வேண்டிய மருந்தான `ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) விலை 16 கோடி ரூபாய் ஆகும் எனவும் மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.

அமெரிக்காவிலிருந்து வந்த மருந்து
அமெரிக்காவிலிருந்து வந்த மருந்து
`1 கோடி தமிழர்கள் ₹10 கொடுத்தாகூட மித்ராவைக் காப்பாத்திடலாம்!' -சிறுமியைக் காக்கப் போராடும் பெற்றோர்

மித்ராவின் உயிரைக் காப்பாற்றும் அந்த மருந்தினை வாங்குவதற்கு நிதியுதவி கேட்டு, குழந்தை மித்ராவின் பெற்றோர் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தனர். `Save Mithra' என்று மித்ராவைப் பற்றிய தகவல் சோஷியல் மீடியாக்களில் வைரலானது. பலரும் சிறுமி மித்ராவுக்கு நிதியுதவி அளித்ததோடு, மற்றவர்களையும் உதவுமாறு தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில், கடந்த ஜூன் 11-ம் தேதியிலிருந்து ஜூலை 11-ம் தேதிக்குள்ளாக, அதாவது ஒரே மாதத்தில் மித்ராவின் மருத்துவச் செலவுக்குத் தேவையான ரூ.16 கோடி நிதி கிடைத்தது. இருந்தபோதிலும், அந்த மருந்தினை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யக் கிட்டத்தட்ட 35% இறக்குமதி வரி கட்ட வேண்டிய சூழல் உண்டானது.

அதற்கு சுமார் 5 கோடி வரை செலவாகும் என்ற நிலையில், மித்ராவின் பெற்றோர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும், மருந்துக்கான இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதனையடுத்த சில நாள்களில் மத்திய அரசு, குழந்தை மித்ராவினுடய மருந்துக்கான இறக்குமதி வரியை செலுத்த விலக்கு அளிப்பதாக அறிவிப்பினை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து மருந்து ஆர்டர் செய்யப்பட்டு இந்தியாவிற்கு வரவைக்கப்பட்ட நிலையில், இன்று குழந்தை மித்ராவுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு சிகிச்சை நிறைவடைந்தது.

சிகிச்சை பெரும் மித்ரா
சிகிச்சை பெரும் மித்ரா
`3 லட்சம் நல் உள்ளங்களால் ₹16 கோடி கிடைச்சிருச்சு; இனி அரசு இதை மட்டும் செய்யணும்!' - மித்ரா தந்தை

இதுகுறித்து குழந்தை மித்ராவின் தந்தை சதீஷ்குமாரிடம் பேசினோம். ``பெங்களூரு, `பாப்டிஸ்ட்' மருத்துவமனையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் மித்ராவுக்கு நல்லபடியாக சிகிச்சை நடந்து முடிந்தது. மக்களுடைய ஒத்துழைப்பாலும், பிரார்த்தனையாலும் மித்ரா நலமுடன் உள்ளார். ஒருமாத காலம் மருத்துவமனையில் மித்ரா தங்கியிருக்க வேண்டுமென மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். பிறகு வாரம் ஒருமுறை மித்ராவை பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டுமெனச் சொல்லியிருக்கிறார்கள். மித்ராவுக்காக கை கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிகப்பெரிய நன்றி!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு