Published:Updated:

கொரோனா வார்டுக்கே சென்று குறைகள் கேட்ட ஆட்சியர்; பொறுப்பேற்ற முதல்நாளிலேயே நடவடிக்கை!

ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு ( நா.ராஜமுருகன் )

கொரோனா பாதித்தவர்களிடம், `தைரியமா இருங்க, பாசிட்டிவ்வா நினைங்க. விரைவில் நலமாகி வீடு திரும்புவீங்க. உங்க பிரச்னையை உடனுக்குடன் மருத்துவர்கள் போக்குவாங்க' என்று கூறி, அவர்களை நெகிழ வைத்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரேயா பி சிங், தான் பதவியேற்ற முதல் நாளே கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குச் சென்று, கொரோனா நோய் பாதித்தவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
நா.ராஜமுருகன்
`என்னைப் பார்த்து இப்போ பலரும் உதவுறாங்க!' - ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக கொடுத்த ஆசிரியை

நேற்றுப் பணியை ஏற்றுக்கொண்ட அவர், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை, காய்ச்சல் முகாம் நடத்துதல், கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
நா.ராஜமுருகன்

அதோடு, உள்ளாட்சி, நகராட்சிப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி கொண்டு ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்தும், உடல் வெப்பநிலையை இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் கருவி கொண்டு பரிசோதனை செய்தும், பொதுமக்களிடம் விவரங்கள் கேட்டு, அதனடிப்படையில் கொரோனா நோய்த்தொற்று இருக்க வாய்ப்பு உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகள் ஆரம்ப நிலையிலேயே மேற்கொள்ளப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா, ``கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாகப் பொதுமக்களைக் காக்கப் பணியாற்றி வரும் அனைத்துத்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன். இத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், நாமக்கல் மாவட்டம் தளர்வுகள் அளிக்க முடியாத நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகத்தான் உள்ளது. இந்த நிலையை ஓரிரண்டு வாரங்களுக்குள் மாற்றி, முழுமையாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக உருவாக்க வேண்டும். எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், சளி, இருமல், காய்ச்சல் உள்ள நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்
ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்
நா.ராஜமுருகன்

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையிலேயே தங்களது தந்தை, தாய், மகன், மகள் போன்ற உறவினர்களை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றவர்கள் விரைவாகக் குணமடைவதுடன், அசாதாரண சூழ்நிலை ஏற்படாவண்ணம் தடுக்க முடியும்" என்றார்.

பிறகு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பாதுகாப்புக் கவச உடையணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுக்குச் சென்றார். அந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதித்தவர்களிடம், ``தைரியமா இருங்க, பாசிட்டிவ்வா நினைங்க. விரைவில் நலமாகி வீட்டுக்குத் திரும்புவீங்க. உங்க பிரச்னையை உடனுக்குடன் மருத்துவர்கள் போக்குவாங்க" என்று கூறி, அவர்களை நெகிழ வைத்தார். அதோடு, அங்கு சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோய்த் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து, ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் நோயாளிகளின் நுரையீரல் தொற்றின் அளவு குறித்து சி.டி ஸ்கேன் அறிக்கையைக் காட்டி, மாவட்ட ஆட்சித்தலைவரிடம், தொற்றின் தன்மை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விளக்கினார்கள்.

ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
நா.ராஜமுருகன்

இருந்தாலும் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம், ``நீங்கள் அழைத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனே வந்து கவனிக்கிறார்களா?' என்று கேட்டு, மருத்துவ உதவி உடனுக்குடன் நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்த பிறகே, திருப்தியடைந்தார். மேலும், உணவு வழங்கப்படுவது குறித்தும், அதன் தரம் மற்றும் சுவையின் திருப்தி குறித்தும் கொரோனா வைரஸ் தொற்றார்களிடம் கேட்டு உறுதி செய்த பின் அங்கிருந்து விடைபெற்றார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியில் சேர்ந்த முதல் நாளே, கவச உடையணிந்து கொரோனா வார்டு வரை சென்று, அங்குள்ள கொரோனா தொற்றாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் நலம் விசாரித்தது, அவர்களின் மனதில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

கனிவான பணிக்கு வாழ்த்துகள் மேம்!

அடுத்த கட்டுரைக்கு