Published:Updated:

`நாம் சாதித்துவிட்டோம்!’ - கொரோனா பாதிப்பிலிருந்து நாமக்கல் மாவட்டம் மீண்டது எப்படி?


சிகிச்சை முடிந்தோரை வீட்டுக்கு வழியனுப்பும் நிகழ்வு
சிகிச்சை முடிந்தோரை வீட்டுக்கு வழியனுப்பும் நிகழ்வு

‘சிவப்பு மண்டலத்திலிருந்து விரைவில் ஆரஞ்சு மண்டலம்!’ – கொரோனாவின் பிடியிலிருந்து நாமக்கல் மாவட்டம் தப்பியது எப்படி?

ரெட் அலர்ட்டில் இருந்த நாமக்கல் மாவட்டம், கொரொனாவின் பிடியிலிருந்து வேகமாக மீண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 77 பேரில் பலரும் படிப்படியாய் குணமாகி வீடு திரும்பினர். இறுதியாக, நேற்று முன்தினம் வரை 15 பேர் சிகிச்சைபெற்றுவந்தனர். அவர்களும் நேற்று வீடு திரும்பியதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களில் நாமக்கல்லும் இணைந்துள்ளது.

ஆய்வுப் பணியில் அமைச்சர் தங்கமணி, கலெக்டர்
ஆய்வுப் பணியில் அமைச்சர் தங்கமணி, கலெக்டர்
ஈரோடு, திருப்பூர், கோவையைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் சாத்தியமானது எப்படி?

கோழிப் பண்ணைகள், விசைத்தறி கூடங்கள், லாரி பாடி கட்டும் கூடங்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் அதிகமுள்ளனர். எனவே, மக்கள் ஓரிடத்தில் அதிகம் கூடுவதைத் தடுக்க, கொரோனா பாதிப்பு தொடங்கிய ஆரம்பகாலம் முதலே ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட பகுதி
தடை செய்யப்பட்ட பகுதி

இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், நாமக்கல் மாவட்டம் ரெட் அலர்ட் மண்டலமானது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மேலும் கடுமையாக்கியது. முகக்கவசம் இன்றி வெளியில் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவோர் கண்டிக்கப்பட்டனர்.

ஆய்வுப் பணியில் கலெக்டர் மெகராஜ்
ஆய்வுப் பணியில் கலெக்டர் மெகராஜ்

மாவட்ட மக்களுக்கு பச்சை, நீலம், சிவப்பு நிற அட்டைகளில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்டது. அந்த அட்டையில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மட்டுமே வாரத்தில் இரண்டு தினங்களுக்கு மட்டும் காய்கறிகள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியில் வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கட்டது. அந்தச் செயல்பாடு தற்போதுவரை நடைமுறையில் இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டம் முறைப்படுத்தப்பட்டது.

லாரிகள் பயன்பாடு அதிகமுள்ள மாவட்டம் இது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் லாரி ஓட்டுநர்கள் உட்பட, அதில் வருகை தந்தவர்களைப் பரிசோதனை செய்ய மாவட்டத்தின் 14 பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற்காக மூன்று ஷிஃப்ட்டுகளில் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர். பரிசோதனை முடிந்து ரிசல்ட் வரும்வரை லாரியில் பயணம் செய்தோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தவர்கள் மட்டுமே தாங்கள் செல்லும் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். ‘பாசிட்டிவ்’ என வந்தவர்கள், சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது.

நாமக்கல்
நாமக்கல்

மாவட்டத்தில் 5,600 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 77 பேர் மட்டுமே கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றனர். கடந்த இரண்டு வாரத்தில், மேற்கொண்டு புதிதாய் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 15 பேர் சிகிச்சைபெற்றுவந்தனர். முழுமையாகக் குணமடைந்த அவர்களையும் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகளைக் கூறி வீட்டுக்கு வழியனுப்பிவைத்தார். அப்போது ஆட்சியர் மெகராஜ், ‘உங்கள் ஒத்துழைப்பால் நாம் சாதித்துவிட்டோம்’ என்று அவர்களிடம் பெருமையுடன் கூறினார்.

தற்போது, மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதேநிலை அடுத்துவரும் 15 நாள்களுக்கு நீடித்தால், நாமக்கல் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து, ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறும். தங்கள் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு