Published:Updated:

`மக்களின் மீது முழு அக்கறையோடே பதிவிட்டிருக்கிறேன்!' -வாட்ஸ்அப் பதிவுக்கு நாமக்கல் எஸ்.பி விளக்கம்

எஸ்.பி அருளரசு
எஸ்.பி அருளரசு ( க.தனசேகரன் )

`` `அரசின் உத்தரவைப் பொதுமக்கள் முழுமையாக மதித்துச் செயல்பட வேண்டும். அப்படி மதிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்பதை மக்களின் மீது முழு அக்கறையோடே பதிவிட்டிருக்கிறேன்"

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அருளரசு. இவர் தன்னுடைய வாட்ஸ்அப் பதிவில்... ''டூவீலரில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீதும், அவர்கள் பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்வதோடு வாகனம் பறிமுதல் செய்யப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடைகளுக்கு வருபவர்கள் ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்'' என எச்சரிக்கை செய்து பதிவிட்டுள்ளார். இப்பதிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

 எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

இதுபற்றி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசிடம் பேசியதற்கு, ``கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நேரத்தில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். இல்லையென்றால் பெரும் விபரீதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் சிலர் இந்த அசாதாரண சூழலைப் புரிந்து கொள்ளாமல் வழக்கம் போல இருக்கிறார்கள். கடந்த 22ம் தேதி சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போது நாமக்கல்லில் பெரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வேடிக்கை பார்க்க கும்பல் கும்பலாகக் கூடினார்கள். இதனால் நம்முடைய நோக்கத்தில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவைப் பின்பற்றி மக்கள் தங்களை தாங்களே சுய கட்டுப்பாட்டோடு தனித்து இருக்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் வெளியே வரக் கூடாது. அதை மீறி தேவையில்லாமல் டூவீலரில் வெளியே வேடிக்கை பார்க்க வந்தாலோ, நண்பர்களோடு சுற்றித் திரிந்தாலோ அவர்களுடைய வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தை ஓட்டி வந்தவர் மீதும், அவர் மைனராக இருக்கும் பட்சத்தில் அவருடைய பெற்றோர்கள் மீதும் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு சக்கர வாகனத்தில் அனுமதியில்லாமல் சென்றாலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்க ஒரே நேரத்தில் அனைவரும் கும்பலாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கடைகளில் பொருள்களை வாங்கும் போது 1 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்க வேண்டும். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவைப் பொதுமக்கள் முழுமையாக மதித்துச் செயல்பட வேண்டும். அப்படி மதிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை என் மாவட்ட மக்களின் மீது முழு அக்கறையோடே பதிவிட்டிருக்கிறேன்.

அருளரசு
அருளரசு

நாமக்கல் மாவட்ட மக்கள் மிகுந்த விழிப்புணர்வு உடையவர்கள். சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து நாமக்கல் வந்த இளைஞரை வீட்டில் 15 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி வந்திருக்கிறார். உடனே மக்கள் எங்களுக்குக் கொடுத்த தகவலையடுத்து அவரைப் பிடித்து அரசு மருத்துவமனையில் 15 நாள் தனி அறையில் வைத்திருக்கிறோம். மக்கள் எங்களிடம் நேரடியாக வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தப் புகாராக இருந்தாலும் நம்பர் 100க்குத் தகவல் கொடுத்தாலே போதும். நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு