Election bannerElection banner
Published:Updated:

`2015ல் எடுத்த ஆக்‌ஷன்... உயர்ந்த பிறப்பு விகிதம்'- நாமக்கல் மாவட்டத்துக்கு கிடைத்த விருது!

collector mariyam
collector mariyam

புதுடெல்லியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து விருது பெற்றார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம்.

தேசிய அளவில் 'பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' எனும் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, தமிழகத்தின் நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. `பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' எனும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஜனவரியில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேசிய அளவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களும், தமிழகத்தின் திருவள்ளூர், நாமக்கல் உள்பட 20 மாவட்டங்களும் தேர்வுசெய்யப்பட்டன.

girl baby
girl baby

டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை சிறந்த முறையில் உயர்த்தியதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், அதன் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகப் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தற்காக, அதன் ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இதுபற்றிப் பேசிய நாமக்கல் ஆட்சியர் மு.ஆசியா மரியம், "நாமக்கல் மாவட்டத்தில் 2014-15-ம் ஆண்டில், குழந்தைகள் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 867 பெண் குழந்தைகள் என்ற அளவில் இருந்தது. மாவட்ட ஆட்சியராக நான் பொறுப்பேற்ற பிறகு, `பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தைச் செயல்படுத்த சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண் குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தலைத் தடுத்தல், பெண் குழந்தைகள் பெற்ற தம்பதிகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள்மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோர் மூலம் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை கர்ப்பிணிப் பெண்களிடம் எடுத்துரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

collector mariyam
collector mariyam

பாலினத்தைக் கண்டறிவதற்காக ஸ்கேன் பரிசோதனை மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு இது தொடர்புடைய தடுப்புச் சட்டத்தின் கடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் 2019ல் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 947 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பெண் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதைப் பாராட்டும் வகையில், நாமக்கல் மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு