Published:Updated:

`டயாலிஸிஸ் சிகிச்சை; 4 லட்ச ரூபாய்க்கு மருந்து, மாத்திரைகள்!' - நெகிழவைத்த நாமக்கல் தி.மு.க மா.செ

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

இன்றைய காலத்தில் ஏழை, எளிய மக்களும் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக உட்கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளை வாங்க முடியாமல் தவிப்பதை அறிந்தோம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கில் பொதுமக்கள் மட்டுமல்ல, சில முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளும் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்கள். ஆனால், பல இடங்களில் தி.மு.க நிர்வாகிகள் நிவாரணப் பொருள்களை வழங்கிவருகின்றனர்.

அதிலும், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், டோல் ஃபிரீ நெம்பர் தொடங்கி வீடு தேடிச் சென்று இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கிவருகிறார். இது, பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டயாலிசிஸ் சிகிச்சையில் சிறுவன்
டயாலிசிஸ் சிகிச்சையில் சிறுவன்

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, தி.மு.க கிழக்கு மாவட்டம். சமீபத்தில், இந்த மாவட்டப் பொறுப்பாளராக, தி.மு.க இளைஞரணி தலைவராக இருந்த ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவர், கொரோனா ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து தன் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களுக்கும் பல உதவிகளைச் செய்துவருகிறார்.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கையுறை, முகக்கவசங்களுடன், அவர்கள் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான அரிசி, எண்ணெய், மளிகைப் பொருள்கள், பால், பிஸ்கட் போன்ற பொருள்களையும் வழங்கி வந்தார். மேலும், சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம், இதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் உதவித் தொகையையும் கொடுத்து அசத்திவருகிறார்.

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமாரிடம் பேசினோம். ''எங்களுடைய கட்சித் தலைவர் மற்றும் மாநில இளைஞரணிச் செயலாளர் அறிவுறுத்தலின்படி, கொரோனா ஊரடங்கு அறிவித்த உடனே கட்சி நிர்வாகிகளை அழைத்து மாவட்ட மக்களுக்குச் சேவை செய்ய முடிவெடுத்தோம். அதையடுத்து, மாவட்ட ஐ.டி லிங் மூலமாக டோல் ஃபிரீ நெம்பரைத் தொடங்கினோம்.

தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கையுறை, முகக்கவசம், கிருமி நாசினிகளை வழங்கினோம். பூட்டப்பட்ட கடைகளின் ஓரத்தில் தஞ்சமடைந்திருக்கும் சாலையோரவாசிகள், ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலையைப் பார்க்க முடியவில்லை. உடனே பால், பிஸ்கட், சாப்பாடுகளை வழங்கினோம்.

கையறு நிலையில் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் தினக்கூலித் தொழிலாளிகளின் நிலையை அறிந்து, அவர்களுக்கு அரிசி, எண்ணெய், மளிகைப் பொருள்களைக் கொடுத்தோம். இன்றைய காலத்தில் ஏழை, எளிய மக்களும் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவைப் போல மருந்துகளை உட்கொள்ளவேண்டி உள்ளது. ஆனால் அவர்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க முடியாமல் தவிப்பதை அறிந்தோம்.

உடனே, ராசிபுரம் வேலவன் மெடிக்கலில் சுமார் 4 லட்சத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி, நோயாளிகளின் வீட்டுக்கே சென்று வழங்கிவருகிறோம்.

மருந்து வழங்கல்
மருந்து வழங்கல்

அதுமட்டுமல்லாமல், முடியாத நோயாளிகளை நாமக்கல் மகாராஜா மற்றும் காவிரி மருத்துவமனைகளுக்குக் கூட்டிப்போய் மருத்துவ சிகிச்சையும் வழங்கிவருகிறோம். சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியின் மகன் கண்ணன் என்ற சிறுவன் மாதந்தோறும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்று டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார்.

ஊரடங்கால் வெளியே போக முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு, நாமக்கல் மகாராஜா மருத்துவமனையில் சேர்த்து, அவரின் உயிரைக் காப்பாற்றியது வாழ்நாளில் மறக்க முடியாது. எங்க கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல்வாதியாக இருந்த எங்களை தற்போது சமூக சேவகர்களாக மாற்றியிருக்கிறார். மக்களுக்கு நேரடியாக சேவை செய்வது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு