Published:Updated:

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை-மகன்! - விரைந்துமீட்ட தீயணைப்பு வீரர்கள்

ர.ரகுபதி

ஆடிப்பெருக்கைக் கொண்டாட திருச்செங்கோட்டை அடுத்த பட்லூர் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடிய ஈரோட்டைச் சேர்ந்த தந்தை-மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களை திருச்செங்கோடு தீயணைப்பு படையினர் விரைந்துசென்று நீண்டநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தந்தை-மகன் மீட்பு
தந்தை-மகன் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனிதநீராடி காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தது. இதேபோல் திருச்செங்கோடு அருகே பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராட, ஈரோடு பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, அவருடைய மகன் கிருஷ்ணன் ஆகிய இருவரும் வந்தனர்.

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிருடன் மீட்பு
காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிருடன் மீட்பு

அவர்கள் இருவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன், இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் இருந்த தீயணைப்பு வாகனத்துக்கு தகவல் அளித்துவிட்டு, ஆற்றில் கயிறுகூட இல்லாமல் நீந்திச் சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார்.

இதனிடையே, திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், கோவிந்தசாமி, துரைராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இறையமங்கலம் பகுதியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்லூர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்து வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தீயணைப்பு வீரர் மோகன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இருந்ததைக் கண்டு மற்ற வீரர்களும் ஆற்றில் நீந்தி தந்தை-மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி மயக்க நிலையில் உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதை அந்தப் பகுதியில் நின்ற சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து தீயணைப்பு வீரர்களை பாராட்டி வாட்ஸ்-அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த வீடியோ நாமக்கல் மாவட்டம் முழுவதும் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் முதலுதவி செய்து அவர்கள் வந்த தீயணைப்பு வாகனத்திலேயே இறைய மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் செயலைப் பாராட்டினார்கள்.