Published:Updated:

`ஒரு கோழிக்கு 45 ரூபாய் நஷ்டம்!'- மத்திய அரசின் உதவி கோரும் நாமக்கல் எம்.பி

நாமக்கல்லை தனி மண்டலமாக அறிவித்தால் இந்தியாவில் எந்தப் பகுதியில் பறவைக்காய்ச்சல் வந்தாலும், நாம் எல்லா நாடுகளுக்கும் எவ்வித பிரச்னையுமின்றி முட்டைகளை ஏற்றுமதி செய்யமுடியும்' என்று கூறியுள்ளார் நாமக்கல் எம்.பி சின்ராஜ்.

முட்டை
முட்டை

நாமக்கல்லில் நேற்று தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் நிறுவனத் தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவரும், நாமக்கல் எம்.பியுமான ஏ.கே.பி.சின்ராஜ் பேசிய போது, "முட்டைகளை கடனுக்கு வியாபாரிகளிடம் கொடுக்கிறோம்.

கடந்த 6, 7 மாதமாக பண்ணையாளர்களுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கோழிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.45 வரை நஷ்டம் ஏற்படுகிறது.
நாமக்கல் எம்.பி சின்ராஜ்

இதில் நமக்கு பாதுகாப்பு இல்லை. எனவே வருகிற 1-ம் தேதி முதல் முட்டை வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள வியாபாரிகளிடம் மட்டுமே முட்டைகளை கொடுக்கவேண்டும்.பண்ணையாளர்கள் யாரும் வாட்ஸ்அப் மூலம் ஒரு சங்கத்தையோ அல்லது தனிநபரை பாதிக்கும் வகையில் அவதூறு செய்திகளை அனுப்பவேண்டாம்' என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``மூலப்பொருள்களின் விலை உயர்வால் தீவன உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. கடந்த 6, 7 மாதமாக பண்ணையாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கோழிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.45 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

Vikatan

இதுபோன்ற சூழ்நிலையில் இத்தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெறுவது, வெளிநாடுகளிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்வது, வங்கிக் கடனை ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்ய கேட்டுக்கொள்வது, வட்டி விகிதத்தை 4 சதவிகிதம் வரை குறைக்க கேட்பது குறித்து விவாதித்தோம். இனிவரும் காலங்களில் கோழி மற்றும் முட்டைகளை விலை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைப்பது என முடிவு செய்துள்ளோம். கோழித்தீவன மூலப்பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க, வரும் காலங்களில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும்.

கூட்டத்தில் பேசிய நாமக்கல் எம்.பி சின்ராஜ்
கூட்டத்தில் பேசிய நாமக்கல் எம்.பி சின்ராஜ்

வருகிற 26-ந் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் உள்ள பிரச்னைகள், குளறுபடிகள் குறித்து எடுத்துக்கூற உள்ளோம். முட்டை ஏற்றுமதியைப் பொறுத்தவரை நாமக்கல்லை தனி மண்டலமாக மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தனி மண்டலமாக அறிவிக்கப்படும்போது இந்தியாவில் எந்தப் பகுதியில் பறவைக்காய்ச்சல் வந்தாலும், நாம் எல்லா நாடுகளுக்கும் எவ்வித பிரச்னையுமின்றி முட்டைகளை ஏற்றுமதி செய்யமுடியும். சத்துணவு முட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய கமிட்டி ஒன்றை அமைக்க உள்ளோம்" என்று கூறி முடித்தார்.