Published:Updated:

பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் `நம்ம கோவை வாட்ஸ் அப் குரூப்’... கலெக்டர் பாராட்டு!

கோவை
கோவை

பெரும்பாலானோர் கைகளில் ஸ்மார்ட் போனும், அதில் வாட்ஸ் அப்பும் இருக்கிறது. பெரும்பாலும் அதை ஃபார்வர்டு மெசேஜ்களுக்குத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், நம்ம கோவை வாட்ஸ் அப் குழு அப்படி இல்லை.

கோவை கீரணத்தம் பகுதியில் இருக்கும் மரியநாயகம் சிங்கராஜ் என்பவரின் மனைவி புதுக்கோட்டையில் இறந்துவிடுகிறார். அவரது மனைவியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் இருக்கிறது. மரியராஜ் அங்கு சென்றால்தான், உடலை வாங்க முடியும் என்ற நிலை. இதுகுறித்த மெசேஜை, காலை 10.32 மணிக்கு நம்ம கோவை எனப்படும் வாட்ஸ் அப் குழுவில் ஒருவர் பகிர்கிறார். 11.30 மணிக்கு அந்த நபருக்கு பாஸ் கிடைத்துவிட்டது.

நம்ம கோவை வாட்ஸ் அப் குழு
நம்ம கோவை வாட்ஸ் அப் குழு

அதேபோல, கோவை இருகூர் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் எந்த உதவியும் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்ற தகவலை அவரின் தொடர்புஎண்ணுடன், இரவு 8.05 மணிக்கு அதே நம்ம கோவை வாட்ஸ் அப் குழுவில் மற்றொருவர் பகிர்கிறார். “தாசில்தாரிடம் பேசிவிட்டேன். அவர் பார்த்துக்கொள்வார்” என்று இரவு 8.08 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கிறார்.

மற்றொரு உரையாடலில் “கோவைக்கு 5,000 N-95 மாஸ்க்குகள், 10,000 PPE kits தேவை” என்று மாவட்ட ஆட்சியர் காலை 9.56 மணிக்கு அதே நம்ம கோவை வாட்ஸ் அப் குழுவில் தகவலைப் போடுகிறார். காலை 10.04 மணிக்கு அதற்கான பணியைத் தொடங்கிய தன்னார்வலர்கள், அடுத்த நாளே N-95 மாஸ்க்குகள், PPE kits வழங்கியும்விட்டனர். லாக் டெளனால் நாடே முடங்கிக் கிடக்கிறது. கொரோனா வைரஸாலும் பசியாலும் பலர் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், அரசுடன் இணைந்து ஆங்காங்கே பல நல் உள்ளங்கள் தங்களாலான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

கோவை
கோவை

அதுவே ஒரு குழுவாக மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இயங்கினால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் நம்ம கோவை வாட்ஸ் அப் குழு. தற்போது, பெரும்பாலானோர் கைகளில் ஸ்மார்ட் போனும், அதில் வாட்ஸ் அப்பும் இருக்கிறது. பெரும்பாலும் அதை ஃபார்வர்டு மெசேஜ்களுக்குத்தான் பயன்படுத்துகிறோம்.

ஆனால், நம்ம கோவை வாட்ஸ் அப் குழு அப்படி இல்லை. சென்னைப் பெரு வெள்ளம், கேரளா வெள்ளம், கஜா புயல் போன்ற பல இயற்கை சீற்றங்களுக்குக் குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்துவிட்டு, இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கோவையை மீட்க அரசு நிர்வாகத்துக்குப் பக்க பலமாக நிற்கிறது. நம்ம கோவை வாட்ஸ் அப் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரவீந்திரன், “2015-ம் ஆண்டு விஜயகார்த்திகேயன் கோவை மாநகராட்சி ஆணையராக இருந்தபோதுதான் இந்தக் குழுவைத் தொடங்கினோம்.

ரவீந்திரன்
ரவீந்திரன்

அதிகாரிகள், பெரு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பத்திரிகை ஊடகங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் அந்தக் குழுவில் இணைத்தோம். கோவையில் பல நல்ல விஷயங்களைச் செய்தோம். அதிகாரிகள் நம்பிக்கையைப் பெற்றோம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கான தீர்வுகளுடன் அதிகாரிகளை அணுகுவோம். அதன் மூலம் தீர்வும் விரைவில் கிடைத்தது.

மற்ற பகுதிகளில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களுக்கு உதவ C4TN (Coimbatore4Tamilnadu) என்ற பெயரில் இயங்கி வருகிறோம். சென்னை வெள்ளத்தின்போது, 80 லாரிகளில் நிவாரணப் பொருள்களை வழங்கினோம். சென்னைக்குத் தன்னார்வலர்களாக அதிக உதவி செய்தது நம்ம குழுதான். கேரளா வெள்ளத்தின்போது 70-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரணப் பொருள்களை வழங்கினோம்.

நம்ம கோவை வாட்ஸ் அப் குழு
நம்ம கோவை வாட்ஸ் அப் குழு

இப்போது, கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோவையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கியுள்ளோம். 50 ஆயிரம் மாஸ்க்குகள், 10,000 PPE கிட்கள், 3,000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளோம். இப்போதெல்லாம் நெகட்டிவிட்டியை உருவாக்குவது எளிதாகவும் பாசிட்டிவிட்டியை உருவாக்குவது கடினமாகவும் ஆகிவிட்டது. அந்தக் கடினமான பணியில்தான் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

நம்ம கோவைக் குழுவின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் மணியன், “கோவையில் பல தன்னார்வலர்கள் தனித்தனியாக தங்களாலான பணிகளைச் செய்து வந்தனர். அவர்களை எல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குழுவைத் தொடங்கினோம். பிறகு, கோவையில் இயங்கி வரும் பல பெரு நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் இணைத்தோம். சில பணிகளை அரசுதான் செய்ய முடியும். சில பணிகளை தன்னார்வலர்களும், பெரு நிறுவனங்களும்தான் செய்ய முடியும். அதேபோல, சில பணிகளை அனைவரும் சேர்ந்துதான் செய்ய முடியும். அப்படி எல்லாவிதப் பணிகளுக்கும் இந்தக் குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது.

மணியன்
மணியன்

எல்லோரும் அவரவரால் முடிந்த பணிகளைச் செய்து கோவையை உயர்த்துவதே இதன் நோக்கம். ஒரு அதிகாரி இங்கிருந்து மாற்றப்பட்டவுடன், அவர் அடுத்து பணிக்கு வரும் அதிகாரிக்கு இந்தக் குழுவைப் பற்றிச் சொல்லிவிட்டுச் செல்கிறார். புதிதாக கோவைக்கு வரும் அதிகாரிகளுக்கு இங்குள்ள நிலவரம் விரைவில் புரிவதுடன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் இது உதவுகிறது.

கேரள வெள்ளத்தின் போது இங்கு ஒரு கன்ட்ரோல் ரூம் அமைத்து 8,000 மக்களை மீட்டோம். கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு அங்கு 250 ஏக்கர் மதிப்பிலான விளை நிலங்களை புதுப்பித்துக்கொடுத்துள்ளோம். இப்போது, கொரோனா வைரஸ்க்கு அரசுக்கு பக்க பலமாக நிற்பதுடன், மக்களுக்கான தேவையை ஆராய்ந்து உதவி வருகிறோம். கோவையில் எந்தெந்தப் பகுதியில் என்ன மாதிரியான தேவை இருக்கிறது என்பது பற்றிய மேப் எங்களிடம் இருக்கிறது. தன்னார்வலர்கள் ஒருங்கிணைக்க, பெரு நிறுவனங்கள் அதற்கு நிதியுதவி செய்கின்றனர்.

நம்ம கோவை வாட்ஸ் அப் குழு
நம்ம கோவை வாட்ஸ் அப் குழு

அராசங்கம் அதற்கு ஒப்பதல் அளிக்க, கோவை மக்கள் அதன் பயனை அடைகின்றனர். இதை எல்லாம் ஆவணப்படுத்திக்கொண்டிருக்கிறோம். முதல் நாள், இரண்டாவது நாள் என ஒவ்வொரு நாளும் தேவை எப்படி இருந்தது என்பதை ஆவணப்படுத்தி, அடுத்து ஏதாவது அசாதாரண சூழ்நிலை வரும்போது அதை எளிதில் எதிர்கொள்ள இது உதவும்“ என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, “மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, மருத்துவர்கள் என்று ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் அந்தக் குழுவில் இருக்கின்றனர். அதேபோல, பெரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும் இருக்கின்றனர். இப்படி ஒரு குழுவைக் காண்பதே மிகவும் அரிது. திருச்சியில் நான் இருந்தபோது அங்கு ஒரு வாட்ஸ் அப் குழு இருந்தது. ஆனால், அது இந்த அளவுக்குப் பரந்து விரிந்து செயல்படவில்லை. கோவைக்கே உரிய சிறப்பு குணங்களுடன் அந்தக் குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவார்கள். தேவையில்லாத எந்த விஷயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆட்சியர் இராசாமணி
ஆட்சியர் இராசாமணி

பல இடங்களில் நல்ல தீர்வுகளுடன் பிரச்னையைச் சொல்லும், அவர்களின் அணுகுமுறை எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பல விதங்களில் அவர்கள் அரசுக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அவர்களை சரியாகப் பயன்படுத்தினால், அது கோவையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கொரோனா தாக்கம் முடிந்தவுடன் அதற்கான பணிகளில் இறங்குவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு