Published:Updated:

நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த முயன்ற நந்தினி கைது; என்ன நடந்தது?

 நந்தினி
நந்தினி

தொடர் வீட்டுக்காவலை மீறி தமுக்கம் முன்பு நீட்டை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்த கிளம்பிய நந்தினி மற்றும் ஆனந்தன் கைது செய்யப்பட்டு மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்

நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து போராடப்போவதாக அறிவித்த நிலையில், நந்தினியும் அவர் தந்தை ஆனந்தனும் இன்று கைது செய்யப்பட்டார்கள்.

மதுரை நந்தினி
மதுரை நந்தினி

சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து மதுவுக்கு எதிராகவும், டாஸ்மாக் மூலம் மது விற்கும் அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி தமிழகம் முழுவதும் பல வழக்குகளுக்கும், சமூக விரோதிகளின் தாக்குதலுக்கும் ஆளானவர் நந்தினி.

மதுவுக்கு எதிரான போராட்டத்தோடு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகிறார். வாக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடத்தக் கூடாது என்ற கோரிக்கையோடு கடந்த ஆண்டு பிரதமர் வீட்டுக்கு முன் போராடச் சென்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தந்தை ஆனந்தனுடன் நந்தினி (பைல் படம்)
தந்தை ஆனந்தனுடன் நந்தினி (பைல் படம்)

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நந்தினியை தி.மு.க ஆதரவாளராகச் சித்திரித்து சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்த சிலர், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து, ஊரடங்குத் தளர்வில் மதுக்கடைகளை திறந்த நிலையில், `இதை எதிர்த்து இப்போது நந்தினி போராட்டம் நடத்துவாரா?' என்று விமர்சித்தனர்.

கடந்த 20-ம் தேதி, மதுக்கடையை திறந்த தி.மு.க அரசுக்கு எதிராகப் போராடப் போவதாக நந்தினி அறிவிக்க, அவரை வீட்டுக் காவலில் வைத்து, வெளியில் விடாமல் வீட்டைச் சுற்றி காவல்துறையினரை நிறுத்தியது அரசு.

இந்நிலையில், இன்று காலை வீட்டுக்காவலை மீறி மதுரை தமுக்கம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராடப் போவதாக நேற்று அறிவித்திருந்தார் நந்தினி.

மதுரை நந்தினி
மதுரை நந்தினி

இன்று காலை போராடக் கிளம்பியபோது நந்தினியும் அவர் தந்தை ஆனந்தனும் கைது செய்யப்பட்டார்கள்.

இதுபற்றி நந்தினியின் கணவர் குணா, தங்கை நிரஞ்சனா நமக்கு அனுப்பிய தகவலில், ``தொடர் வீட்டுக்காவலை மீறி, தமுக்கம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தக் கிளம்பிய நந்தினி மற்றும் ஆனந்தன் கைது செய்யப்பட்டு மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

தன்னுடைய போராட்டத்துக்குச் சிலர் உள்நோக்கம் கற்பிப்பதைச் சுட்டிக்காட்டி, ``தந்தை ஆனந்தன் வேளாண்மைத் துறையில் இளநிலை பொறியாளராக 24 வருடங்கள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, அதில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து கிடைக்கிற வருவாயில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எங்களுக்கு வேறு எந்த தேவையும் இல்லை. மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம்" என்று தன் குடும்பத்தை பற்றி ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார் நந்தினி.

அடுத்த கட்டுரைக்கு