Published:Updated:

`4 கிலோமீட்டர் சாலைக்கு 8 ஆண்டு போராட்டம்!'- கேள்விக்குறியாகும் பழங்குடி குழந்தைகளின் கல்வி

இப்பதான் எங்க குழந்தைங்க முதன்முதலாக பள்ளிக்கூடத்துக்குப் போறாங்க. அதுவும் இந்த மோசமான ரோடால நின்னுடுமோனு பயமா இருக்கு.

Tribal village
Tribal village

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நட்டக்கல் பழங்குடியினர் கிராமம். இந்தக் கிராமத்தில் 25 இருளர் பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Tribal village
Tribal village

வனத்தை ஒட்டிய பகுதியில் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு இன்றளவும் போதிய அடிப்படை வசதிகள் சென்று சேராத நிலையில் தவித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது மருத்துவமனை, கல்வி நிலையம் போன்றவற்றுக்கு கீழ் கோத்தகிரி அல்லது கோத்தகிரி பகுதியையே சார்ந்துள்ளனர். நகர தொடர்பு ஏதுமற்ற வன விலங்குகள் உலவும் வனப்பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியில் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டிவந்தனர்.

Tribal village road
Tribal village road

இதுகுறித்து வாகன ஓட்டுநர் ஒருவர் கூறுகையில் ``சிறிய வாகனம் மட்டுமே செல்லக்கூடிய இந்தச் சாலை மலைப்பாங்கான பகுதியில் உள்ளது. ஆபத்து நிறைந்த கொண்டை ஊசி வளைவுகளும் சரிவுகளிலும் இருப்பதால் சாதாரணமாகவே வாகனங்களை இயக்க முடியாது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் கற்கள் பெயர்ந்து மிகமோசமான நிலையில் உள்ளதால் சில இடங்களில் நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற நிலையில் உள்ளது. எனவே, இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து நட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பிச்சை முத்து, ``இப்பதான் எங்க ஊர்ல இருந்து குழந்தைங்க முதன் முறையாக பள்ளிக்குப் போறாங்க. சீரமைக்கப்படாத இந்தச் சாலையால ரொம்ப சிரமமா இருக்கு. மழைக்காலங்களில் பசங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில்லை. இது தொடர்பாக 8 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை" என வேதனை தெரிவிக்கிறார்.

Irula tribe Pichaimuthu
Irula tribe Pichaimuthu

இதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ``ஓட்டு கேட்க மட்டும்தான் வருவாங்க. மத்தபடி அவங்களுக்கு வேற எதுவும் தேவையில்லை. ஒரு ரோட சரிசெஞ்சி தாங்கனு கெஞ்சிக் கேக்குறோம். அப்பவும் யாரும் மனசு இரங்கல" என கண்ணீர் வடிக்கின்றார்.