Published:Updated:

``தாத்தா, அப்பா பட்ட கஷ்டத்தையே எங்க புள்ளைங்களும் படணுமா?'' - நயம்பாடி இருளர் மக்களின் கதை!

நயம்பாடி மக்கள்
நயம்பாடி மக்கள் ( தீ.ராஜேஷ் )

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நயம்பாடி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள இருளர் சமூகத்தின் நிலை இதுதான். 

மழை அழகானது. இடைவெளிவிடாமல் தொடர்ந்து பெய்யும் போது மட்டும் பல்வேறு இன்னல்களைத் தந்துவிட்டுச் செல்கிறது. சில வாரங்கள் முன்னர், விட்டு விட்டுப் பெய்த மழையால் தமிழகமே புத்துணர்ச்சியடைந்தது. அதன் வெளிப்பாடாகச் சமூக ஊடகங்களில் மழைக்கவிதைகளும் சூடான சிற்றுண்டி புகைப்படங்களும் பகிர்ந்து நெட்டிசன்ஸ் சிலாகித்திருந்தனர். அந்த மகிழ்ச்சிப்பதிவுகளின் நடுவே பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வரும் வழக்கறிஞர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி பகிர்ந்திருந்த புகைப்படங்கள் மனதைக் கனமாக்கின. ``மழை என்றாலே முதல் பாதிப்பு பழங்குடி மக்களுக்குத்தான்’’ என்று பதிவிட்டிருந்த அவர் நயம்பாடி கிராமத்தில் வசிக்கும் பூர்வகுடி மக்களின் நிலையைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார்.

நயம்பாடி மக்கள்
நயம்பாடி மக்கள்
தீ.ராஜேஷ்

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்டதுதான் நயம்பாடி கிராமம். இருளர் குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் சின்ன மழைக்கே குடிசைகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் நிற்கும். நம் சமூகத்தின் பெரும் பகுதி மக்கள் மழையை ரசிக்கும் தருணத்தில் நம் பூர்வகுடி மக்கள் ஒவ்வொரு மழைக்கும் இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். நயம்பாடியில் வசிக்கும் பழங்குடி இருளர் சமூகம் ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இந்த நீர்நிலைப் பகுதியில்தான் வசிக்கிறது.

இதுகுறித்து நயம்பாடி கிராமத்தில் வசிக்கும் ராமராஜ் நம்மிடம் பேசினார். ‘‘எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போறாங்க. கொஞ்ச நாள் முன்ன மழை வந்தப்போ, எங்க ஊர் முழுக்கத் தண்ணி புகுந்திடுச்சு. உடனே, நாங்க தாலுகா ஆபீஸ்ல குடிசைகளுக்குள் தண்ணி புகுந்துட்டதா சொன்னோம். அவங்க சமூகக்கூடத்தைத் திறந்து விட்டாங்க. மழை நின்னு தண்ணி வடியுற வரைக்கும் எங்க புள்ளைங்களோட சமுதாயக் கூடத்துலதான் தங்கினோம். நாங்க மொத்தம் 21 குடும்பங்கள் இருக்கோம். எல்லாருமே அங்கேயேதான் இரவும் பகலும் தங்குனோம். நாங்க இருக்குறதே ஏரிக்குள்ளதான் அதனால எப்ப மழை வந்தாலும் இதே நிலைதான். ஒவ்வொரு முறையும் நாங்க அதிகாரிகள்கிட்ட மனு கொடுப்போம். இன்னும் எங்களுக்கு ஒரு வழி பிறக்கல. எங்களை அப்படியே விட்டுட்டாங்க.

குடும்பத்தினருடன் ராமராஜ்
குடும்பத்தினருடன் ராமராஜ்
தீ.ராஜேஷ்

என்னைப் பெத்தவங்க, பாட்டன் முப்பாட்டன்னு தண்ணியிலும் வெள்ளத்திலும் கஷ்டப்பட்டாங்க, அடுத்து என் தலைமுறையும் கஷ்டப்பட்டுச்சு. இப்போ என் பிள்ளைகளும் கஷ்டப்படுறாங்க. ஒவ்வொரு மழைக்கும் ஊரில் இருக்கும் நிறைய பேருக்கு உடம்பு முடியாமப் போயிடும். என் பிள்ளைகளும் உடம்புக்கு முடியாம படுத்துட்டாங்க. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய், செலவு பண்ணி பிள்ளைங்களுக்கு வைத்தியம் பார்த்தோம். நாங்க பெரியவங்க பூச்சிக்கடி, கொசுக்கடியெல்லாம் தாங்கிப்போம். என் புள்ளைங்க என்ன பாவம் பண்ணுச்சுங்க. அதிகாரிகள் வருவாங்க. பார்ப்பாங்க. ஆனால் நடவடிக்கை எடுக்கமாட்றாங்க. இந்தவாட்டி அதிகாரிகள் வந்து எங்க ரேஷன் அட்டையெல்லாம் பார்த்துட்டுப் போனாங்க. தாலுகா ஆபீஸ் வரச் சொல்லியிருக்காங்க. இந்தவாட்டியாச்சும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வேறு இடத்துல மனை பட்டா கொடுத்தா போதும்’’ என்றார்.

பழங்குடியின பாதுகாப்பு சங்க ஆலோசகர் ராஜேஷ் நம்மிடம் பேசுகையில், ``இருளர்களின் வாழ்வியல் பழங்குடியின வாழ்வியலைச் சார்ந்தது. வேட்டையாடுறது, பாம்பு பிடிக்கிறது போன்ற தொழிலின் மூலம் வருமானம் ஈட்டி வந்தாங்க. பாம்பு தோல் ஏற்றுமதி இருந்த காலகட்டத்தில் அதை வைத்து வருமானம் ஈட்டினாங்க. அதே மாதிரி முயல், முள்ளம்பன்றி, உடும்பு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருமானம் ஈட்டினாங்க. பாம்பு பிடிக்கத் தடை வந்ததும் இவர்களின் வருமானம் முற்றிலும் இல்லாமப் போச்சு. அப்புறம் காட்டில் இருக்கும் முயல் போன்ற சின்னச் சின்ன விலங்குகள்தான் இவர்களின் உணவா இருந்துச்சு. அவற்றைதான் வேட்டையாடி உணவாக சாப்பிட்டாங்க. வேட்டையாடுறதுக்கும் தடை போட்டதும் பொதுச்சமூகத்துடன் சேர்ந்து வாழும் நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டாங்க. அரசாங்கம் பாம்பு, முயல் உள்ளிட்ட விலங்குகளின் நலன் கருதி வேட்டையாடுறதுக்குத் தடை விதிச்சது தப்பில்ல. ஆனால், அதனால பாதிக்கப்பட்ட இருளர் மாதிரியான பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழி என்னன்னு சிந்திச்சாங்களா?

நயம்பாடி மக்கள்
நயம்பாடி மக்கள்
தீ.ராஜேஷ்

30 வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் இவர்களின் வீடுகள் குளத்தங்கரை, பம்புசெட்டு போன்ற பகுதிகளில்தான் இருக்கும். அந்த நில உடைமையாளர்கள், தங்களது இடத்தைப் பாதுகாக்க கூலியில்லாத பாதுகாவலர்களா இருளர் மக்களைத் தங்க வெச்சிப்பாங்க. இன்றைய காலகட்டத்தில் ஆத்தங்கரை, குளத்தங்கரையில்தான் வசிச்சிட்டு வராங்க. நம்மைப் போன்ற வெகுஜன மக்களால குளங்களும் ஏரிகளும் அதிக அளவு மாசுபடுத்தப்பட்டிருக்கு. எனவே, இவங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்குறது இல்ல. இவங்க குடிசைகள் பெரும்பாலும் பனை ஓலைகளில்தான் பின்னப்பட்டிருக்கும். ஒரு சிலர் இரும்பு ஷீட் போட்டு வசிப்பாங்க.

`அப்பாவின் அறிவுதான் என் ஆராய்ச்சிக்கு விதைபோட்டுச்சு!’ – பிஹெச்.டி படிக்கும் முதல் இருளர்  பெண்!

நீர்நிலைகளில் வசிக்கிறவங்கள அகற்றணும்னு அரசு நடவடிக்கை எடுக்குது. இதில் பெரிதும் பாதிக்கப்படுறது இருளர்கள்தான். ஆக மொத்தம் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் மொத்தமாகப் பறிக்கப்பட்டு, அதற்கான மாற்று வழியும் தெரியாமல் திண்டாடி வர்றாங்க. ஒரு மனுஷன் தன் தலைமுறையோடு வாழ்க்கையில் முன்னேறணும்னா அவனுக்கு நிலையா ஒரு இடம் வேணும். அந்த இடம் இவங்களுக்கு இல்ல. நிலையான இடமே இல்லாம இந்த மக்களுக்கு எப்படி ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் போன்ற விஷயங்கள் கிடைக்கும்? அரசின் சலுகைகள் எப்படி இவர்களைச் சென்றடையும். இது எதுவுமே கிடைக்காம, வாழ்க்கையில் பிடிமானம் இல்லாம வாழ்ந்துட்டு இருக்காங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு இருளர்களுக்கு பல உதவிகள் செய்யுது.

நயம்பாடி மக்கள்
நயம்பாடி மக்கள்
தீ.ராஜேஷ்

ஆனால், இன்னும் பாதிக்குப் பாதி மக்கள் எந்த அடிப்படை வாழ்வாதாரமுமின்றி அல்லல்பட்டுட்டு இருக்காங்க. நிறையா பேர் கொத்தடிமைகளா மாட்டிக்கிறாங்க. இவங்களுக்கு ஒண்ணுன்னா கேக்குறதுக்கு ஆள் கிடையாது. இதைப் பயன்படுத்தி பலர் செங்கல்சூளை, கல்குவாரி போன்ற இடத்துல இருளர்களை கொத்தடிமைகளா பயன்படுத்திக்கிறாங்க. இந்த அவலம் எல்லாம் மாறணும். அதற்கு ஒரே வழி இவர்களுக்கென்ற மனை ஒதுக்கப்படணும்’’ என்றார்.

நீர்நிலை புறம்போக்குகள் குறித்து அக்கறை காட்டும் அரசும் நீதிமன்றங்களும், வேறு வழியின்றி அங்கு வசிக்கும் இருளர் சமூக மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். காலம் காலமாக சொந்தமாக ஒரு காணி நிலம் கூட இல்லாமல் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி புறம்போக்கு நிலங்களில் சின்னச் சின்ன கூடாரம் அமைத்து வாழ்ந்து வரும் இந்தச்சமூகம் மீது கூடுதல் அக்கறை காட்ட வேண்டியது அவசியம் அல்லவா? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நயம்பாடி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள இருளர் சமூகத்தின் நிலை இதுதான்.

நயம்பாடி மக்கள்
நயம்பாடி மக்கள்
தீ.ராஜேஷ்

ஒருபுறம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடங்களும் கல்லூரிக் கட்டடங்களும் எழுப்பும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும், பணபலம், அதிகார பின்புலம் இருக்கும் தைரியத்தில் தொடர்ந்து புறம்போக்கு நிலங்களையும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து வருகின்றனர். மற்றொரு புறம், சமூகத்தால் பெரிதும் கண்டுகொள்ளப்படாத இருளர் பழங்குடியின மக்கள் வேறு வழியின்றி நீர்நிலைகளில் குடிசைகளை அமைத்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். நீர்நிலைகள் மீது அக்கறை காட்டும் அரசு, தெரிந்தே தவறு செய்பவர்களையும் அடிப்படை வாழ்வாதாரமின்றித் தவிக்கும் மக்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கக் கூடாது. காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு சமூகத்தின் ஏதோ ஓர் ஓரத்தில் சத்தமின்றி அல்லல்படும் இவர்கள் கேட்பதெல்லாம் ஒன்று மட்டும்தான், பயமில்லாமல் வாழ ஒரு துண்டு நிலம்...

அடுத்த கட்டுரைக்கு