Published:Updated:

மனச்சோர்வால் தலைமுடியைச் சாப்பிட்ட மாணவி; மாவட்ட ஆட்சியருக்கு குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம். ( தே.சிலம்பரசன் )

பள்ளி மாணவி ஒருவர், தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வினால் தன் தலைமுடியையே பிய்த்துச் சாப்பிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே தினமும் சுமார் 6 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி, அப்பா - அம்மா இருவரும் தினமும் வேலைக்குச் சென்றுவிடுவதால் தன் பாட்டியுடன் மட்டுமே இருந்துள்ளார் அம்மாணவி. பாட்டியைத் தவிர்த்து, வெளியுலகத் தொடர்பு, நண்பர்கள், உறவினர்கள் என யாருமின்றி தனிமையிலேயே இருந்து வந்த அவர், ஒரு கட்டத்தில் மனதளவில் சோர்வடைந்து தன் தலைமுடியைத் தானே பிய்த்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட முடியால் ஆன கட்டி.
அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட முடியால் ஆன கட்டி.
ஒரு வருடமாக மனச்சோர்வு; தலைமுடியைப் பிய்த்து சாப்பிட்ட மாணவி; வயிற்றில் உருவான 1.5 கிலோ கட்டி!

திடீரென ஒரு நாள் வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மாணவி. அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர், ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம், வயிற்றில் முடியுடன் கட்டி இருப்பதை அறிந்தனர். அதைத் தொடர்ந்து, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜமகேந்திரன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு கிலோ முடியாலான கட்டியை அச்சிறுமியின் வயிற்றிலிருந்து அகற்றினர்.

பின் மனநல மருத்துவரிடம் மாணவிக்கு ஆலோசனை மேற்கொண்ட போதே, அம்மாணவிக்கு கடந்த ஒரு வருடமாக மனச்சோர்வு ஏற்பட்டு தன் தலைமுடியைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்த செய்தியை 29.06.2021 அன்று நமது விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

நோட்டீஸ்
நோட்டீஸ்

இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR), விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரான மோகன், இதுகுறித்து பதிலளிக்கும்படியும் அதில் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு