Published:Updated:

`மதுரை பேரையூரில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள்!'- ஆச்சர்யம் தரும் வரலாற்றுத் தகவல்கள்

முது மக்கள் தாழி
முது மக்கள் தாழி

மதுரை பேரையூர் அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்கால மக்கள் வாழ்விடப் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரைப்போல் பல வியக்கவைக்கும் தொல்லியல் எச்சங்கள் மதுரையிலும் கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில், 6-ம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த 19-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில், கீழடி மட்டுமில்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் செய்யப்பட உள்ளன.

கீழடி
கீழடி

கீழடி அகழாய்வுப் பணியின் தொடர்ச்சியாக, பழைமையான முதுமக்கள் தாழி கிடைக்கப்பெற்ற ஈமக்காட்டை அகழாய்வுப் பணிக்கு உட்படுத்த உள்ளனர். இந்தப் பகுதி, கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை கிராமத்தில் வருவது கீழடிக்குக் கூடுதல் சிறப்பு. கீழடி அகழாய்வில் ஈமக்காடுகளை அகழாய்வு செய்வது இதுவே முதல் முறை.

இந்நிலையில், மதுரை பேரையூர் அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்கால மக்கள் வாழ்விடப் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆர்வலருமான முனைவர் முனீஸ்வரன் பேசுகையில், ``தமிழகத்தில், பல்வேறு இடங்களில் மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சியோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. அதன் ஒரு பகுதி, பேரையூர் மலை அடிவாரப் பகுதியில் ஏராளமாக இருக்கின்றன.

தொல்லியல் எச்சங்கள்
தொல்லியல் எச்சங்கள்

பேரையூரை அடுத்த கொப்பைய சாமி கோயிலின் மலை அடிவாரத்தில் பெருங்கற்கால மக்கள் வாழ்விடம், கல்மேடுகள் கண்டறியப்பட்டன. இங்கு, மூன்று கட்டமான வாழ்விடம் காணப்படுகிறது. அதில் பெருங்கற்காலம் முதல் சங்க காலம் வரை அடக்கம். இப்பகுதியில், கி.மு -1000 முதல் 300 வரையிலான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடான பகுதி, சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பழைமையான ஈமக்காடு பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடம் காணப்படுகிறது. கல் மேடான கட்டுமான வீடுகள் சிதைந்த நிலையில், அவர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள் கறுப்பு சிவப்பு கலந்த பளபளப்பான நிறத்தில் மேற்பரப்பில் காணப்படுகின்றன.

மண்ணில் புதைந்த நிலையில் பல முதுமக்கள் தாழிகள், மேற்பரப்பில் உடைந்த நிலையிலும், புதைந்த நிலையிலும் காணப்பட்டன. குறிப்பாக, முதுமக்கள் தாழியின் உட்பகுதியில், கறுப்பு சிவப்பு வண்ணத்திலான மெல்லிய, தடித்த பானை ஓடுகள், உடைந்த கல் வளையம் உள்ளது. அங்கு காணப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஒருசில தாழிகள், மிகவும் பிரமாண்ட வடிவமைப்பைக் கொண்டிருந்தது. தொல்லியல் பசிக்கு முழுமையாக உணவு அளித்தது.

தொல்லியல் எச்சங்கள்
தொல்லியல் எச்சங்கள்

அதில் ஒரு தாழி, சுமார் 84 செ.மீ விட்டம் 2 அங்குல தடிமனில் உடையாத நிலையில் புதைந்திருக்கிறது. மற்றொன்று, இதைவிட சிறியதாக 60 செ.மீ விட்டத்திலும் 1 அங்குல தடிமனில் உடைந்த நிலையில் இருக்கிறது. தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதி பெண் தெய்வம் போன்ற குறியீட்டு தோன்றலை உருவாக்கியது.

`தந்தத்தில் அணிகலன்; செங்கல் கட்டுமானம்!' - காவிரிக் கரையில் தொல்லியல் குவியல்கள்

பெருங்காலம், பிற்காலம் என்று வேறுபடுத்தும்போது, பெருங்கற்காலத்தில் இறந்தவரின் உடலை, தங்கள் வாழ்விடத்திற்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள். அதை உயிரினங்கள் இரையாக்கிக்கொண்ட பின்னர் கிடைக்கப்பெறும் எலும்பைச் சேகரித்து, அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகளையும் தானியங்களையும் உள்ளே வைத்து மூடி, V வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். பிற்காலத்தில்தான், மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து, அவர்கள் நினைவாக புதைத்த இடத்தின் தாழியைச் சுற்றி குறிப்பிட்ட அளவிலான கல் அடுக்குகள் வைத்து பாதுகாத்தார்கள். இது ஓர் அடையாளமாகவும் விளங்கியது.

தொல்லியல் எச்சங்கள்
தொல்லியல் எச்சங்கள்

பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு, அதைப் பயன்படுத்தி வாழ்ந்ததற்கான சான்றாக, இரும்புத்தாது கொண்டிருந்த கற்கள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன. இரும்பு தயாரிப்பதற்காக, சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழாய் சிதைந்தநிலையிலும் நுன்கற்கால செதில்களும் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு