Election bannerElection banner
Published:Updated:

கள்ளக்குறிச்சி: கொட்டித் தீர்த்த கனமழை! - வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 900 ஆடுகள்

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகள்
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 900 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர் கனமழை பெய்துவருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்திருக்கும் மல்லாபுரம் மற்றும் பாவளம் கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பிள்ளை, பழனி மற்றும் அஞ்சலை ஆகியோர் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்துவந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக இதே பகுதியில்தான் இவர்கள் ஆடுகளை கிடை போட்டுவருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகள்
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகள்

வழக்கம்போல நேற்று இரவு ஆடுகளைக் கொட்டகையில் அடைத்துவிட்டு அருகில் தங்கியிருந்தனர். நேற்று பெய்த கனமழையின் காரணமாக, கல்வராயன் மலை அடிவாரத்தில் பாப்பாத்தி மூளை ஓடைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அனைத்து ஆடுகளும் ஒரேநேரத்தில் அலறிய சத்தத்தைக் கேட்டு குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த கருத்தப்பிள்ளை, பழனி, அஞ்சலை மூவரும் ஆட்டுக் கொட்டகையை நோக்கி ஓடியிருக்கின்றனர்.

அப்போது சீறிவந்த வெள்ளம் ஆட்டுக் கொட்டகையைக் கடந்து சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்தச் சம்பவத்தில் அத்தனை ஆடுகளும் மூன்று பேரின் கண்ணெதிரிலேயே செத்து விழுந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் எஸ்.வி.பாளையம், ஊராங்கினி எனப் பல கிராமங்களைக் கடந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே மிதந்தன.

உயிரிழந்த ஆடுகளிம் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோன துயரத்தில் உரிமையாளர்கள் கதறி அழுதது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தகவலறிந்து அங்கு சென்ற கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆடுகளின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், விசாரணையும் மேற்கொண்டுவருகிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு