Published:Updated:

`எங்கள்ல ஒருத்தருக்குக் கூட கொரோனா இல்லை!’ -கேரளாவில் தவிக்கும் நீடாமங்கலம் தொழிலாளர்கள்

கேரளாவில் தவிக்கும் நீடாமங்கலம் தொழிலாளர்கள்
கேரளாவில் தவிக்கும் நீடாமங்கலம் தொழிலாளர்கள்

’’நாங்க தங்கியிருக்குற ரூமை விட்டு வெளியில வந்தாலே போலீஸ் விரட்டுது. கடந்த ஒரு வாரமா வருமானத்துக்கு வழியில்லை. சொந்த ஊரும் போகமுடியலை. அங்கவுள்ள எங்க குடும்பங்கள் கண்ணீர் வடிக்குது”

கொரோனா ஊரடங்கால், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் 24 பேர், கேரளாவில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வேதனையில் தவிக்கிறார்கள். உணவுக்கு வழியில்லாமல் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் அங்கேயே பரிதவித்து வருகிறார்கள். இதனால் நீடாமங்கத்தில் உள்ள இவர்களது குடும்பத்தினர் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இவர்களைச் சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நீடாமங்கலம்  ரிசியூர் மக்கள்
நீடாமங்கலம் ரிசியூர் மக்கள்

ரிசியூரைச் சேர்ந்த முருகேசன், பாலதண்டாயுதம், சக்திவேல் வெற்றிவேல், கோவிந்தராஜ், பிரவீன்ராஜ், பாக்கியராஜ், சேகர் உள்ளிட்ட 24 விவசாயக் கூலித் தொழிலாளர்கள், கடந்த சில மாதங்களாக கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மானூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்கள். கொரோனா ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 22-ம் தேதியிலிருந்தே இவர்களுக்குக் கடும் நெருக்கடியான சூழல் நேர்ந்தது. மாநில எல்லைகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கும் திரும்ப முடியவில்லை. இந்த அவலநிலையை அறிந்து, நீடாம்மங்கலத்தில் உள்ள இவர்களது குடும்பத்தினர், கண்ணீர் மல்க தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீடாமங்கலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜவேலு என்பவர், இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இத்தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள மன்னார்குடிக்காரரான செல்வ பூபதி என்பவர், இதை அறிந்து, கேரளாவில் உள்ள தனது நண்பர் சண்முகத்திற்குத் தகவல் சொல்லியுள்ளார். மலப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் தொழில் முனைவோரான சண்முகம், அங்கு பரிதவிக்கும் 24 கூலி தொழிலாளிக்கும் தன்னால் இயன்ற உதவியைச் செய்துள்ளார். வருமானம் இல்லாமல் இன்னும் எத்தனை நாள்களுக்குதான் கேரளாவிலேயே துயரப்படுவது? தங்களைப் பிரிந்து நீடாமங்கலத்தில் உள்ள தங்களது குடும்பத்தினரும் பெரும் வேதனையில் தவிப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள், இந்தக் கூலித் தொழிலாளர்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இவர்களில் ஒருவரன முருகேசனிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ‘எங்களோட சொந்த ஊர்ல இப்ப விவசாய வேலைகள் கிடையாது. எங்க குடும்பத்தைக் காப்பாத்த வேற வழியில்லாமதான் கேரளா வந்தோம். இங்கவுள்ள பாக்குத் தோட்டம், தென்னந்தோப்புல கூலி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். எங்களுக்கு இப்படியொரு இக்கட்டான நிலைமை வரும்னு நாங்க நினைக்கவே இல்லை. எங்களோட வருமானத்தை நம்பிதான் எங்க குடும்பங்கள் இருக்கு. அவசர ஒத்தாசைக்குக் கூட அவங்களுக்கு உதவி செய்ய ஆள் இல்லை. நாங்க இங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். எப்ப வருவீங்கனு எங்க குடும்பத்துல உள்ளவங்க கண்ணீர்விட்டுக் கதறுறாங்க. சாப்பாடு இல்லைனாலும் கூட பரவாயில்லை. நாங்க சொந்த ஊர் திரும்பி குடும்பத்தோடு வாழ, தமிழக அரசும் கேரள அரசும் உடனடியா நடவடிக்கை எடுக்கணும். எங்கள்ல ஒருத்தருக்குக் கூட கொரோனா இல்லை. பரிசோதனை பண்ணி பார்க்கட்டும்’ எனப் பெரும் வேதனையோடு பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு