Election bannerElection banner
Published:Updated:

`72 ஆண்டு போராட்டம்; 3 வாரத்தில் தீர்வு!’ - நெக்னா மலைக்கு விடிவுகாலம்

நெக்னா மலையில் போடப்பட்டுள்ள புதிய சாலை
நெக்னா மலையில் போடப்பட்டுள்ள புதிய சாலை

சாலை அமைக்கப்பட்டதால், விடியலை நோக்கி நகர்ந்திருக்கிறது நெக்னா மலைக் கிராமம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்திருக்கிறது, நெக்னா மலைக் கிராமம். இங்கு, 140 குடும்பங்கள் உள்ளன. நெக்னாவுக்குச் செல்ல வேண்டுமெனில், மலையடிவாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணமாகத்தான் செல்ல வேண்டும். நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்களை டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலையில் இருந்தனர், நெக்னா மலை மக்கள்.

குழந்தைக்கு இனிப்பு ஊட்டும் அமைச்சர் வீரமணி
குழந்தைக்கு இனிப்பு ஊட்டும் அமைச்சர் வீரமணி

சாலை வசதி அமைத்துத் தரக்கோரி சுமார் 72 ஆண்டுகளாகப் போராடி வந்தனர். சாலை இல்லாத ஒரே காரணத்தினால், இங்கிருந்து யாரும் பெண் எடுப்பதும் இல்லை, வெளியிலிருந்து பெண் கொடுப்பதும் இல்லை. திருமண வயதைக் கடந்தும் பல பேர் திருமணம் ஆகாமல் உள்ளனர். கல்வி, மருத்துவம் எட்டாக்கனியாக இவர்களுக்கு இருந்தது. இந்த நிலையில், நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு விடியலை நோக்கி நகர்ந்திருக்கிறது, நெக்னா மலைக் கிராமம்.

`சாலை வசதியில்லாததால் யாரும் பெண் கொடுப்பதில்லை!’ -தமிழகத்தில் இப்படியும் ஒரு மலைகிராமம்

ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள அந்த மலைக் கிராம மக்களுக்குக் கடந்த மாதம் 21-ம் தேதி, நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மலை அடிவாரத்திலிருந்து நடந்தே சென்றார். அப்போது, `போர்க்கால அடிப்படையில் நெக்னா மலைக்குச் சாலை வசதி அமைத்துத் தரப்படும். தற்காலிகமாக மண் சாலையை மக்களே அமைத்துக்கொள்ளலாம்’ என்று உறுதியளித்தார் வீரமணி.

சாலையை பார்வையிடும் அமைச்சர்கள்
சாலையை பார்வையிடும் அமைச்சர்கள்

அதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் உதவியுடன் நெக்னா மலை மக்களே சாலை அமைக்கும் பணியில் களமிறங்கினர். 3 வாரங்களில் மலையைக் குடைந்து மலை உச்சிக்கு கார் செல்லக்கூடிய வகையில் மண் சாலையை அமைத்துள்ளனர். இதையடுத்து, அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர் கபில், கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் காரில் சென்று சாலை வசதியைப் பார்வையிட்டனர். மகிழ்ச்சியில் திளைத்திருந்த மலை கிராம மக்களுக்குக் 150 கிலோ இனிப்புகளை வழங்கி அமைச்சர்கள் உற்சாகப்படுத்தினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு