Published:Updated:

`தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி!’ - மண்வெட்டியுடன் களமிறங்கிய நெல்லை ஆட்சியர் ஷில்பா

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியினை பாதுகாக்கும் வகையில் 60 கி.மீ தூரத்துக்கு நதியின் கரையோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர் சதீஷ் மண்வெட்டியுடன் களமிறங்கி தூய்மைப்பணிகளில் ஈடுபட்டார்.

நதியைச் சுத்தப்படுத்தும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா
நதியைச் சுத்தப்படுத்தும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா ( எல்.ராஜேந்திரன் )

பொதிகை மலையில் நெல்லை மாவட்டத்துக்குள் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில் கடலில் கலக்கிறது. தமிழக எல்லைக்குள்ளேயே உற்பத்தியாகி மாநிலத்துக்குள்ளேயே பயணித்து கடலில் கலப்பதால் தண்ணீர் தாவா எதுவும் இல்லாத நதியாக விளங்குகிறது.

தாமிரபரணியைச் சுத்தப்படுத்தும் பணி
தாமிரபரணியைச் சுத்தப்படுத்தும் பணி
எல்.ராஜேந்திரன்

இந்த ஆற்றின் கரையோரப் பகுதிகளில் முள் செடிகள் புதர்மண்டிக் கிடப்பதால் ஆறு சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. அதனால் தாமிரபரணி நதியைப் பாதுகாக்கும் வகையில் பாபநாசம் பகுதியிலிருந்து நெல்லை மாவட்ட எல்லை வரையிலும் உள்ள 60 கி.மீ தூரத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Vikatan

மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரைக் கொண்ட 3000 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். நெல்லை சீவலப்பேரி, சந்திப்பு கைலாசபுரம் உள்பட 61 இடங்களில் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உழைப்பின் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

தாமிரபரணி பராமரிப்புப் பணி
தாமிரபரணி பராமரிப்புப் பணி
எல்.ராஜேந்திரன்

இந்தப் பணிகளை இன்று தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டினார். பராமரிப்பு பணிகளைப் பார்வையிட்ட அவர் மிகுந்த உற்சாகத்துடன் தானே மண் வெட்டியை எடுத்து புதர்களை வெட்டி அகற்றினார். வழக்கமான அதிகாரிகளைப் போல நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விட்டுச் செல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் பணிகளைச் செய்தார்.

Vikatan

இந்தப் பாரமாரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 80,000 ஏக்கர் பாசன வசதியையும் கொடுக்கிறது. இந்த ஆற்றில் கடந்த சில காலங்களாகக் கழிவு நீர் கலப்பு, அமலைச் செடிகள் மண்டிக்கிடப்பது, சுயநலக்காரர்களால் ஆக்கிரமிப்பு எனப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

ஈடுபாட்டுடன் பணி செய்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா
ஈடுபாட்டுடன் பணி செய்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா
எல்.ராஜேந்திரன்

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியைப் பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பாகப் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடந்த 11-ம் தேதி சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் மூலம் தொடங்கப்பட்ட பராமரிப்புப் பணிகள் அடுத்த இரு தினங்களும் நடந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் 3000 பேர் பங்கேற்றனர். இதன் மூலம் தாமிரபரணி சுத்தமடையும் நிலை உருவாகியிருக்கிறது’’ என்றார்கள்.