Published:Updated:

``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் தொடர்வதால் அதிருப்தியடைந்த மாவட்ட ஆட்சியர், இத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

கந்துவட்டி புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை எனப் பலரிடமும் தொடர்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செங்கோட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தனது இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்தடுத்து தற்கொலை முயற்சி! - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆட்சியர் அலுவலக வாயில்கள் அடைக்கப்பட்டு இருவாயில்கள் மட்டுமே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், போலீஸாரின் பலத்த சோதனையையும் மீறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை அதிருப்தியடைய வைத்திருக்கிறது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கும் முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 9-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரம்
தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரம்

பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்ததால் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Vikatan

கடந்த 16-ம் தேதி மானூர் அருகே உள்ள வாள்வீச்சு ரஸ்தா பகுதியைச் சேர்ந்த போதர் என்பவர் இடப்பிரச்னை காரணமாக தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே, அவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை முயற்சி போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

அதனால், பொது மக்கள் தங்கள் சொந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை முயற்சி போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Vikatan

பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மனு செய்தாலே போதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் எவரும், இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் சுமுகமான முறையில் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார். எனினும் `பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக ஏற்படும் அதிருப்தியே பொதுமக்களை இதுபோன்ற செயலுக்குத் தள்ளுகிறது’ என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தீக்குளிக்க முயன்ற விவசாயி போதர்
தீக்குளிக்க முயன்ற விவசாயி போதர்

அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகப் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சண்முகசுந்தரம் என்பவர் தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரை ஏமாற்றியவர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.