Published:Updated:

`வயதான தாய் தந்தையைப் பார்க்கச் செல்கிறேன்!' - நெல்லையில் வட மாநிலத் தொழிலாளி நெகிழ்ச்சி

ரயில் சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
ரயில் சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்கள்

நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் பீகாரைச் சேர்ந்த 1,332 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த அனைவரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

தென் மாவட்டங்களில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். ஹோட்டல் வேலை, கட்டுமானப் பணி, விவசாயப் பணி உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட அவர்களால் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. இங்கு வேலை இல்லாததால் உணவுக்குக்கூட கஷ்டப்பட்டனர். 

பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள்
பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள்

அவர்களில் பலர் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் அணு உலைக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 3,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி வன்முறையில் ஈடுபட்டனர்.

`வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை’ -கூடங்குளத்தில் காவலர் படுகாயம், பதற்றம்!

தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த முயன்ற கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா, காவலர் சக்திவேல் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வட மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆதார் கார்டைக் காட்டும் தொழிலாளி
ஆதார் கார்டைக் காட்டும் தொழிலாளி

அதன்படி, நெல்லை நகரில் தங்கியிருந்து பணியாற்றிய தொழிலாளர்கள், கூடங்குளம் அணு உலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் என மொத்தம் 1,332 பேர் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,296 பேர் ரயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பல்வந்த் என்பவரிடம் பேசியபோது, ``கூடங்குளம் அணு உலைக் கட்டுமான பணிக்காகக் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வந்தேன். அதன் பிறகு ஊருக்குச் செல்லவே இல்லை. ஊரில் என்னுடைய வயதான தாயும் தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். நோயாளிகளான அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்கிற கவலை இருந்தது. 

சமூக இடைவெளியுடன் பேருந்தில் வந்த தொழிலாளர்கள்
சமூக இடைவெளியுடன் பேருந்தில் வந்த தொழிலாளர்கள்

சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏற்கெனவே பதிவு செய்திருந்தேன். இப்போது ஊருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஓரிரு நாளில் என் பெற்றோரைப் பார்க்கப் போகிறேன் என்று நினைக்கும்போதே சந்தோசமாக இருக்கிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு