Published:Updated:

`ரத்த நாளத்துக்குள் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றம்'! - நெல்லை அரசு மருத்துவர்கள் சாதனை

நெல்லையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை செயல்படத் தொடங்கிய நிலையில், ரத்த நாளத்துக்குள் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ரத்த நாளத் துறை மருத்துவர்கள் இணைந்து இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

Deen Dr.Kannan and doctors team
Deen Dr.Kannan and doctors team

நெல்லையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. புளியங்குடியைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய விவசாயியான கருப்பையா என்பவர் கடுமையான வயிற்றுவலிக்கு சிகிச்சை எடுக்க வந்துள்ளார்.

patient Karuppaiah
patient Karuppaiah

அவருக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுநீரக புற்றுநோய் இருக்கக் கூடும் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சிறுநீரக சிரை வழியாக பெருஞ்சிரை வரை புற்றுநோய்க் கட்டி பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் நோய் முற்றியிருந்ததால் உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோய் மற்றும் ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் கூட்டு முயற்சியின் மூலமாக 4 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

100 பரிந்துரைகள், 150 மருத்துவமனைகள், இலவச சிகிச்சை, நிதியுதவி! - அதிரடி காட்டிய ஜெகன்
4 மணி நேரம் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த அறுவைச் சிகிச்சையை வெளியில் மேற்கொள்வதற்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
அரசு மருத்துவமனை டீன் கண்ணன்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவமனையின் டீன் கண்ணன், ``கருப்பையா என்பவருக்கு இடது சிறுநீரக சிரை வழியாக பெருஞ்சிரை வரை புற்றுநோய் பரவியிருந்தது. இதை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஏழை விவசாயியான அவருக்கு நமது மருத்துவமனையில் மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

புற்றுநோய் பரவியிருந்த ரத்த நாளம் மிகவும் மெல்லியது. அதனால் அதைக் கவனமுடன் கையாண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றியிருக்கிறார்கள். இதை உரிய நேரத்தில் அகற்றியிருக்காவிட்டால் பெருஞ்சிரை வழியாக இதயம் வரை பரவி பெரும் ஆபத்தை உருவாக்கியிருக்கும்.

doctors team
doctors team

மிகவும் சிக்கலான இத்தகைய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் அளவுக்கு பல்நோக்கு மருத்துவமனையில் வசதிகள் இருக்கின்றன. புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத் தலைவர் டாக்டர்.சுந்தரம், ரத்த நாள அறுவைச் சிகிச்சைத் துறைப் பேராசிரியர் டாக்டர்.இளஞ்சேரலாதன் அறுவைச் சிகிச்சை துணைப் பேராசிரியர் தீபா, மயக்கவியல் துறைத் தலைவர் அமுதாராணி ஆகியோரின் முயற்சியால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.