Published:Updated:

`ஆன்லைனில் கைவினைப் பொருள் பயிற்சி!’ - ஊரடங்கில் அசத்தும் நெல்லை அருங்காட்சியகம்

இணையம் வழியாக கைவினைப் பொருள் பயிற்சி
இணையம் வழியாக கைவினைப் பொருள் பயிற்சி

அரசு அருங்காட்சியகத்தில் வாரந்தோறும் மகளிருக்கான கைவினைப் பொருள் தயாரிப்புக்கான பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பயிற்சி, தற்போது இணையம் வழியாக நடத்தப்படுகிறது. 

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருள்கள், முதுமக்கள் தாழி, பழங்கால சிலைகள், நாணயங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் இருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, அவற்றின் உள்ளே கிடைத்த பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நெல்லை அரசு அருங்காட்சியகம்
நெல்லை அரசு அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு வாரமும் மகளிருக்கான கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. வீடுகளில் சாதாரணமாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அழகான பொருள்களைத் தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

அமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா?  #DoubtOfCommonMan

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டு வந்த கைவினைப் பொருள் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நிலைமை ஓரளவுக்கு சீரடைந்துள்ள போதிலும், கூட்டம் சேர்ப்பதைத் தவிர்க்கும் வகையில் இணையம் மூலமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

பாட்டில் ஓவியப் பயிற்சி
பாட்டில் ஓவியப் பயிற்சி

இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி கூறுகையில்,``நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக நடத்தப்பட்டு வந்த கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சிகளை கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்திருந்தோம். பெண்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு, நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடும் வகையில் பயிற்சி அளிக்க முடிவு செய்தோம்.

`கிராமத்துக்கான காய்கறிகள்... இது, ஊரடங்கு தந்த மாற்றம்!’  -அசத்தும் சிவகங்கை மாவட்ட ஊராட்சி

காணொலிக் காட்சியின் மூலமாக இரு வாரங்களுக்கு முன்பு சுவர்களில் மாட்டக்கூடிய அழகிய கைவினைப் பொருள் தயாரிப்பது பற்றி கற்றுக்கொடுத்தோம். கடந்த வாரத்தில் வீணாக வீசியெறியப்படும் பாட்டில்களில் அழகிய ஓவியம் வரைந்து காட்சிப் பொருளாக மாற்றுவது குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டது.

கைவினைப் பயிற்சி
கைவினைப் பயிற்சி

இந்த நிலையில், கண்ணாடி ஓவியம் வரைவது குறித்து இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. கலை ஆசிரியர் சொர்ணம் இந்தப் பயிற்சியை அளித்தார். இணையம் வழியாக இந்தப் பயிற்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இத்தகைய பயிற்சியை அளிக்க உள்ளோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு