Published:Updated:

' ஸ்மார்ட்; ஸ்ட்ரிக்ட்; போலீஸ் நண்பன்' - நெல்லை துணை ஆணையர் சரவணனை பாராட்டிய முதல்வர்

காவல்துறை துணை ஆணையர் சரவணன்
காவல்துறை துணை ஆணையர் சரவணன்

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தன் பணிகளில் எப்போதும் சமரசம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அதே சமயம் பொதுமக்களுடன் இணக்கமாகவும் இருந்து சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருகிறார்.

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையராக ஓராண்டுக்கு முன்னர் பொறுப்பேற்றவர், சரவணன். அதன் பின்னர் நெல்லை மாநகர காவல்துறையை மெருகேற்றியது மட்டுமல்லாமல் பொதுமக்களின் நலனுக்காவும் பாடுபடத் தொடங்கினார். 

நெல்லை அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பாதுகாப்பு வசதி
நெல்லை அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பாதுகாப்பு வசதி

அவர் பொறுப்பேற்றதுமே, `நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படத் தொடங்கினார். காவல்துறை மக்களின் நண்பன் என்பதைச் சொல்லில் மட்டும் அல்லாமல் செயலில் காட்டி வருகிறார். அவர் அறிமுகப்படுத்திய `மக்களைத் தேடி மாநகர காவல்துறை’ என்ற திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றது.

தூய்மைப் பணியாளர்களுக்கு `Guard of honour’ - அசத்திய நெல்லை மாநகரக் காவல்துறை 

இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகளும் தங்களின் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடன் ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.

ஸ்கோச் விருது வென்ற நெல்லை காவல்துறை
ஸ்கோச் விருது வென்ற நெல்லை காவல்துறை

மக்களைத் தேடி காவல்துறை திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியதன் காரணமாக நெல்லை மாநகர காவல்துறைக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் `ஸ்கோச்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதன் மூலம் நெல்லை மாநகர காவல்துறையினர் பெருமை அடைந்தனர்.

`டியர் டிசி - மதிப்புமிகு மாணவன்’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்களின் பெற்றோரைத் தலைக்கவசம் அணிய வலியுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. அதைக் கடிதமாக எழுதிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு `மதிப்புமிகு மாணவன்’ என்ற சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. 

' ஸ்மார்ட்; ஸ்ட்ரிக்ட்; போலீஸ் நண்பன்' -  நெல்லை துணை ஆணையர் சரவணனை பாராட்டிய முதல்வர்
`அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்

`நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை' என்ற திட்டத்தின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டன.

நெல்லை மாநகரில் `வேர்களைத்தேடி’ என்ற திட்டத்தை காவல்துறை செயல்படுத்தியது. அதன்படி, தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளைக் கணக்கெடுத்து அவர்களிடம் ஒரு புத்தகம் வழங்கப்படும். போலீஸார் வாரந்தோறும் மூத்த குடிமக்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

முதியோரைப் பாதுகாக்கும் ’வேர்களைத் தேடி’ திட்டம் தொடக்கம்
முதியோரைப் பாதுகாக்கும் ’வேர்களைத் தேடி’ திட்டம் தொடக்கம்

திருநங்கைகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தரத் தொழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கான பயிற்சி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர் மன்றங்களின் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு, பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நெல்லை மாநகர காவல்துறையை மெருகேற்றும் பணியில் துணை ஆணையர் சரவணன் தீவிரப் பங்காற்றி வருகிறார். அத்துடன் சமூக வலைதளங்கள் மூலமாகவும் காவல்துறையின் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறார். 

முதல்வரின் பாராட்டு
முதல்வரின் பாராட்டு

அவரது சேவையைப் பாராட்டும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ட்விடரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், ``காவல்துறை உங்களின் நண்பன் என்பதற்கு உதாரணமாக உங்களின் செயல்பாடுகள் சிறப்பானதாக உள்ளது. மக்களுக்காக ஓடோடிச் சென்று உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து துணை ஆணையர் சரவணன் கூறுகையில், ``முதல்வரிடம் இருந்து பாரட்டுக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தனிப்பட்ட எனக்கு மட்டுமே கிடைத்த பாராட்டு அல்ல. என்னோடு இணைந்து நெல்லை மாநகரில் செயல்பட்டு வரக்கூடிய அனைவருக்குமானது. 

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி தனியாக வசிக்கிறார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அவரின் மகன் எங்களுக்குத் தகவல் அளித்த சில நிமிடங்களில் போலீஸார் அவர்களைச் சந்தித்து உதவி செய்தார்கள். அதை வெளிநாட்டில் வசிக்கும் அந்த நபர் இணையத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்த தகவலைப் பார்த்து முதல்வர் எங்களைப் பாராட்டினார். அவரது பாராட்டு எங்களைத் தொடர்ந்து சிறப்பாகப் பயணிக்க வைக்கும்” என்றார் நெகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு