Published:Updated:

`இனி, முந்தைய தவறுகளைக் கண்டறிய முடியும்!’-நெல்லையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க SmartCop செயலி

SmartCop செயலி அறிமுகம்
SmartCop செயலி அறிமுகம்

ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்காமல் சாலைகளில் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ’ஸ்மார்ட் காப்’ என்ற செயலியை நெல்லை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன், மூன்று வண்ணங்களில் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே கடைகளுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆனாலும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள் அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுவதால், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் பொதுமக்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்துவருகிறார்கள்.

பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் கூடுதல் முயற்சியாக, நெல்லை மாநகர காவல்துறை சார்பாக SmartCop என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கட்டிருக்கிறது. 

ஸ்மார்ட் காப் செயலி
ஸ்மார்ட் காப் செயலி

ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், இந்தச் செயலிமூலம் தேவையின்றி வெளியில் நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ சுற்றுவோரின் விவரங்களைச் சேகரிக்க முடியும். ஊரடங்கை மீறுவோரின் பெயர், கைப்பேசி எண், வாகனப் பதிவெண், ஓட்டுநர் உரிம எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்டவற்றை இந்தச் செயலியில் பதிவுசெய்ய முடியும்.

தேவையில்லாமல் சுற்றுவதற்காகப் பிடிபட்டவரின் நிகழ்விடத்தை அந்தச் செயலி தானாகவே கைப்பேசியின் ஜி.பி.எஸ் மூலமாக எடுத்துக்கொள்ளும். பிடிபட்ட நபர், வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தைச் செயலி மூலம் படம் எடுத்துக்கொள்ளலாம். 

' ஸ்மார்ட்; ஸ்ட்ரிக்ட்; போலீஸ் நண்பன்' -  நெல்லை துணை ஆணையர் சரவணனை பாராட்டிய முதல்வர்

பிடிபட்ட நபரின் கைப்பேசி எண் அல்லது வாகன எண்ணை உள்ளிடும்போது, செயலி முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து அவருடைய முந்தைய தவறுகளைப் பற்றியும் எச்சரிக்கை செய்யும். முந்தைய தவறுகள் குறுகிய காலத்திற்குள் நடந்திருந்தால் அபராதமோ அல்லது வாகனத்தைப் பறிமுதல் செய்தோ நடவடிக்கை எடுக்க முடியும்

இந்தச் செயலி ஒருங்கிணைந்த டேட்டாபேஸ் மூலம் இயங்குவதால், பல்வேறு இடங்களில் நடைபெற்ற தவறுகளை ஒப்பிட்டு மாநகரம் முழுவதும் நடவடிக்கை எடுக்க முடியும். நகரம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளையும், செயலியை உபயோகிக்கும் காவலர் உள்ளிட்டவை செயலியின் முகப்பு பக்கத்திலேயே காணலாம். 

புதிய செயலி அறிமுகம்
புதிய செயலி அறிமுகம்

நடவடிக்கை எடுக்கப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு உறுதிசெய்வதன் மூலம், தவறான எண் கொடுக்கப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு முறை நடவடிக்கை எடுக்கும்போதும், எத்தனையாவது முறையாகத் தவறு நடந்துள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இந்தச் செயலி மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்க முடியும் என போலீஸார் நம்புகிறார்கள். இதுகுறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் கூறுகையில், “பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. அதன்மூலம் காவல்துறையின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும். 

பொதுமக்கள் அவசியல் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்ப்பதால், கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.
சரவணன், காவல்துறை துணை ஆணையர்

ஊரடங்கு காலத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமான தூரம் சென்றால், இந்த செயலி மூலம் கண்டுபிடித்து விட முடியும். அதனால் பொதுமக்கள் ஏமாற்ற முடியாது என்பதுடன், காவலர்களின் வேலைப் பளு குறையும். பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு