Published:Updated:

`அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்

காவல்துறை ஆய்வாளரின் மகள் அப்ரீன் ரைடா
காவல்துறை ஆய்வாளரின் மகள் அப்ரீன் ரைடா

`எங்கப்பாகூட உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாகிப் போச்சு. அவர் பக்கத்துல உட்கார்ந்து பேசக்கூட முடியல. கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் எல்லோரும் இருக்கோம்' என்கிறார், காவல்துறை அதிகாரியின் மகள். 

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் தனித்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில துறைகளைச் சேர்ந்தவர்கள் வெளியில் சென்று பணியாற்றவேண்டிய கடமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் மருத்துவப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது, சமூக இடைவெளியை ஏற்படுத்தி நோய் வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். உள்ளாட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரும் களப்பணியாற்றிவருகிறார்கள்.

`மாஸ்க் அணியும் நாடுகளில் கொரோனா  கட்டுப்படுத்தப்படுகிறதா?'-ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்

நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சாகுல்ஹமீது, அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறார். உணவு கிடைக்காமல் முடங்கிக்கிடந்த வட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது, பொதுமக்களுக்கு முகக்கவசம் அளிப்பது போன்ற பணிகளைச் செய்துவருகிறார்.

பொதுமக்களுக்கு உதவும் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது
பொதுமக்களுக்கு உதவும் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது

இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீதுக்கு 9 வயதில் அப்ரீன் ரைடா என்ற மகளும் நான்கு வயதில் ஆதின் அல்ஹஸ்மீன் என்ற மகனும் உள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் அவரது மகள் அப்ரீன் ரைடா, கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் பேசிய உருக்கமான பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

சிறுமி அப்ரீன் ரைடா தனது பதிவில், ”நாமெல்லாம் பயந்துக்கிட்டிருக்கிற விஷயம், கொரோனா வைரஸ். இந்தியா மட்டுமில்லாம சீனா, இத்தாலி, அமெரிக்கா உட்பட பல நாட்டுல இந்த வைரஸ் பரவிக்கிட்டிருக்கு. எல்லோருமே இதுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாம தவிச்சுக்கிட்டிருக்காங்க. கொரோனா பாதிப்பால் உலகத்துல பல பேர் தினமும் இறந்துக்கிட்டிருக்காங்க.

அப்ரீன் ரைடா
அப்ரீன் ரைடா

கொரோனா வைரஸ் பாதிப்புல இருந்து நம்மளக் காப்பாத்துறதுக்காகவே நம்ம கவர்மென்ட் 24 மணிநேரமும் வேலை செஞ்சுக்கிட்டிருக்காங்க. டாக்டர்ஸ், போலீஸ், நர்ஸ்னு எல்லோருகே நமக்காக வேலை செய்யுறாங்க. அவங்களுக்கு நாம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டாமா? நம்ம அரசு போட்டிருக்கும் 144 தடை உத்தரவை நாம மதிக்கணும்.

எங்கப்பா ஒரு போலீஸ் அதிகாரிதான். அவர், இந்தத் தடை உத்தரவை அமல்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கார். அவர் தினமும் வீட்டுக்கு வர்றதே எப்பவாவதுதான். அதிலும் அவர் வீட்டுக்கு வரும்போது, நாங்க கூட இருக்க முடியறதில்ல. தூரத்தில் இருந்தே சாப்பிட்டுட்டு போறார். அவர்கூட பக்கத்தில் இருந்து பேசக்கூட முடியலை. 

சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை

நான் உண்மையிலேயே அவரை ரொம்பவே மிஸ் பண்ணுறேன். அதனால் நாம அரசு போட்டிருக்கும் தடை உத்தரவை மனசில் வைத்து செயல்படணும். அரசு சொல்றதைக் கேட்டு நடக்கணும். அப்பத்தான் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும். வாழ்வது நாமாக இருக்கட்டும்... வீழ்வது கொரோனாவாக இருக்கட்டும்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

சிறுமி அப்ரீன் ரைடாவின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு