Published:Updated:

`எனக்கு வரதட்சணை வேண்டும்... ஒரே ஒரு கண்டிஷன்!' -பேராவூரணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சப் கலெக்டர்

சிவகுரு பிரபாகரன் - கிருஷ்ணபாரதி
சிவகுரு பிரபாகரன் - கிருஷ்ணபாரதி

தான் மட்டும் இல்லாமல் தனக்கு மனைவியாக வருபவரும் தான் பிறந்த ஊருக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் சேவையாற்ற வேண்டும் என நினைத்தார். அதன்படியே திருமணமும் செய்து கொண்டார்.

பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உதவி ஆட்சியர் ஒருவர், `தனக்கு வரும் மனைவி ஒரு டாக்டராக இருக்க வேண்டும், அவர் இந்தக் கிராமத்தில் தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும். இதுதான் எனக்கு அந்தப் பெண் தரும் வரதட்சணை' எனக் கூறி அதற்கு சம்மதம் தெரிவித்த பெண்ணைக் கரம் பிடித்த சம்பவம் அனைத்துத் தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உதவி கலெக்டர் சிவகுருபிரபாகரன்
உதவி கலெக்டர் சிவகுருபிரபாகரன்

பேராவூரணி அருகே உள்ள மேல ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருபிரபாகரன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே ஊரின் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறையோடு செயல்பட்ட இவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து தனது கடினமான உழைப்பால் படித்து உதவி ஆட்சியராகப் பணிக்குச் சேர்ந்தவர்.

இந்தநிலையில் இவருக்குப் பெற்றோர் வரன் தேடினர். அதற்கு சிவகுரு பிரபாகரன், `எனக்கு ஒரேயொரு வரதட்சணை மட்டும் வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். அதற்கு, `நீதான் கலெக்டர் ஆச்சே.. உனக்கு என்ன கேட்டாலும் கொடுப்பாங்க. என்ன வேண்டும் எனச் சொல்' எனப் பெற்றோர் கேட்டுள்ளனர்.

`எனக்கு ஒரு டாக்டர்தான் மனைவியாக வர வேண்டும். அவர் நம்ம ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது தங்கி இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும். இந்த வரதட்சணை எனக்கு கட்டாயம் வேண்டும்' எனக் கூற, இதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ந்தனர். ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் சிவகுரு. இதனால் அவருக்கு வரன் அமைவது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தன.

இந்தநிலையில் இந்த வரதட்சனையைக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார் சென்னை நந்தனம் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் ஒருவர். இதற்கு அவரது மகளான டாக்டர் கிருஷ்ணபாரதியும் சம்மதிக்க சில தினங்களுக்குமுன் சிவகுரு பிரபாகரனுக்கும் கிருஷ்ணபாரதிக்கும் அவரது சொந்த ஊரிலேயே விவசாயிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

உதவி கலெக்டர் திருமணம்
உதவி கலெக்டர் திருமணம்

இதுகுறித்து ஊர் மக்களிடம் பேசினோம். `` சிவகுருவின் பெற்றோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இதனால் போதுமான வருமானம் இல்லாமல் குடும்பத்தில் கடும் வறுமை நிலவி வந்தது. சிவகுருவின் பெற்றோருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். கீற்று பின்னும் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்ததுடன் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தனர். சிவகுருவுக்கு தான் ஒரு கலெக்டராக வேண்டும் எனச் சிறு வயதிலிருந்தே பெரும் ஆசை. இதையடுத்து தன் பெற்றோருக்கு உதவியாக கீற்று பின்னி கொண்டே படிக்கத் தொடங்கினார்.

இந்தப் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. எனவே, அவர்கள் படும் துன்பத்தை அருகில் இருந்து பார்த்தே வளர்ந்தவர். இதற்கிடையில் நல்ல முறையில் அவர் படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. அதில் பணிபுரிந்தபடியே கலெக்டருக்குப் படித்து அதில் தேர்ச்சியும் பெற்றார். தற்போது உதவி கலெக்டராக இருக்கும் அவர் எப்போதும் போல் ஊருக்கு ஒண்ணுன்னா முதல் ஆளாக வந்து நிற்பார்.

ஒரு விவசாயி நன்றாக வாழ்ந்தால், இந்த நாடே நன்றாக இருக்கும் என நினைக்கிறவன் நான். அதனால் எனக்கு வரப்போகும் மனைவி அடிக்கடி இங்கு தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன்
சிவகுரு பிரபாகரன்

அப்துல்கலாம் பெயரில் டாக்டர் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சி குழு என ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்து வந்தார். விவசாயிகள் தன் உடல்நலனைப் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். எங்களுக்குப் போதிய விழிப்புணர்வும் இல்லை என்பதால் எங்கள் நிலையை அறிந்து சிவகுரு 15 மருத்துவர்கள் கொண்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார். பின்னர் ஒட்டங்காடு ஏரியைத் தானே முன் நின்று ஊர்மக்கள் உதவியுடன் தூர் வாரினார். அத்துடன் தூர்ந்து போன எட்டுக் குளங்களையும் நீர் வரும் பாதையையும் தூர் வாரச் செய்தார். இப்போது ஏரி நிரம்பி கடல் போலக் காட்சியளிக்கிறது. இதேபோல் நெல்லையிலும் ஏரி குளங்களை தூர்வாரும் பணியைச் செய்திருக்கிறார். ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் வலியை உணர்ந்தே இந்தச் செயலைச் செய்து வருகிறார்.

`21 வயதில் டி.எஸ்.பி; 25 வயதில் சப் கலெக்டர்!'- பாஜகவினரை கன்னத்தில் அறைந்த ஐஏஎஸ் பிரியா வர்மா யார்?

வாரம் ஒருமுறையாவது ஊருக்கு வந்து எல்லோரையும் பார்த்து விட்டுத்தான் செல்வார். அந்த சமயத்தில், `உடம்ப பார்த்துக்கங்க' என எல்லோரிடமும் அன்பாகக் கூறுவார். சிவகுருவோட வளர்ச்சியும் எங்கள் மீது அவர் காட்டும் அக்கறையையும் பார்த்து பலமுறை நாங்கள் நெகிழ்ச்சியடைந்திருக்கிறோம். தான் மட்டும் இல்லாமல் தனக்கு மனைவியாக வருபவரும் தான் பிறந்த ஊருக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் சேவையாற்ற வேண்டும் என நினைத்தார். அதன்படியே திருமணமும் செய்து கொண்டார்.

உதவி கலெக்டர் சிவகுருபிரபாகரன்
உதவி கலெக்டர் சிவகுருபிரபாகரன்

அவரைத் திருமணம் செய்துகொள்ள ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ் ஏன் டாக்டருக்குப் படித்த பெண்களும் வந்தனர். ஆனால், அவர் போட்ட கண்டிஷனைக் கேட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். தற்போது கிருஷ்ணபாரதி, சிவகுருவின் மனஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவரைக் கரம் பிடித்திருக்கிறார்" என்கின்றனர் உற்சாகமான குரலில்.

சிவகுரு பிரபாகரனிடம் பேசினோம். `` விவசாயிகள் விளையும் நிலத்தைப் பற்றிக் கவலைபட்டாலும் படுவார்களே தவிர, தங்கள் உடம்பைப் பற்றி ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கூடத் தெரியாது. ஒரு விவசாயி நன்றாக வாழ்ந்தால், இந்த நாடே நன்றாக இருக்கும் என நினைக்கிறவன் நான். அதனால் எனக்கு வரப்போகும் மனைவி அடிக்கடி இங்கு தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன். என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட கிருஷ்ணபாரதி, `எல்லோரையும் நல்லா பார்த்துப்போம்' என என் கைகளைப் பற்றிக் கொண்டார். இதைவிட என் வாழ்நாளில் வேறு மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது" என்றார் நெகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு